செய்திகள் (Tamil News)

செல்போனில் ஜெயலலிதா குரலில் தேர்தல் பிரசாரம் - அதிமுக ஏற்பாடு

Published On 2019-03-09 06:40 GMT   |   Update On 2019-03-09 06:40 GMT
பாராளுமன்ற தேர்தலுக்காக வாக்காளர்களின் செல்போன் எண்ணில் ஜெயலலிதா குரலில் தேர்தல் பிரசார ஆடியோ மூலம் வாக்கு சேகரிக்க அதிமுக ஏற்பாடு செய்துள்ளது. #ADMK #ParliamentElection #Jayalalithaa
சென்னை:

பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தேர்தல் வியூகம் ஆகியவற்றில் தீவிரமாக உள்ளன.

தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பிரசார யுக்திகளை ஒவ்வொரு கட்சியும் ஆராய்ந்து வருகிறது. நவீன தொழில்நுட்பத்தை தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தியும் வருகிறார்கள்.

கட்சி தலைவர்களின் குரலை பதிவு செய்து அதை பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பி பிரசாரம் செய்தனர். இதற்கிடையே அ.தி.மு.க. சார்பில் சமூக வலைதளங்களில் பிரசாரம் தொடங்கப்பட்டுவிட்டது.



ஜெயலலிதா இருந்தபோது அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப குழுவினர் அவரது குரலை வாக்காளர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பி பிரசாரம் செய்தனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தினர்.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் குரல் பதிவு தொழில் நுட்பத்தை அ.தி.மு.க. மேலும் மேம்படுத்தி இருக்கிறது. அதில் வாக்காளர்களின் செல்போன் எண்ணுக்கு வரும் ஜெயலலிதா குரல் பிரசார ஆடியோவில், அந்த செல்போன் எண்ணுக்கு உரியவரின் பெயரை அழைத்து வாக்கு கேட்பது போல் உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த பிரசார குரல் தினமும் லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு அனுப்பப்படுகிறது. #ADMK #ParliamentElection #Jayalalithaa

Tags:    

Similar News