செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை - தவ்ஹித் ஜமாத் அறிவிப்பு

Published On 2019-03-19 04:49 GMT   |   Update On 2019-03-19 04:49 GMT
பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளது. #Parliamentelection

ராமநாதபுரம்:

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மாநிலச் செயலாளர் நெல்லை பைசல், ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொள்ளாட்சி பாலியல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படாததால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலங்கள் பட்டியலில் தற்போது தமிழகமும் சேர்ந்துள்ளது.

முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை கொண்டு செயல்பட்டுள்ள இந்த சம்பவத்தில் ஆளுங்கட்சியினர் சிலரின் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது.

பா.ஜனதா கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பண மதிப்பிழப்பால் உள்நாட்டு சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. காவிரி பிரச்சினை உள்ளிட்ட தமிழக உரிமைக்கு பாதகமளிக்கும் வகையிலேயே மத்திய அரசு செயல்பட்டுள்ளது.

நீட் தேர்வு உள்ளிட்டவற்றிலும் தமிழக மாணவ, மாணவிகளை பாதிக்கும் வகையிலேயே பா.ஜனதா அரசின் செயல்பாடு அமைந்திருந்தது. பா.ஜனதா ஆட்சியில் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் நிகழ்வுகளே நடந்துள்ளன.

வருகின்ற பாராளுமன்ற பொது தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #Parliamentelection

Tags:    

Similar News