செய்திகள்

கருமந்துறை விநாயகர் கோவிலில் 22-ம் தேதி சாமி தரிசனம் செய்துவிட்டு பிரசாரம் தொடங்கும் முதல்வர்

Published On 2019-03-20 07:44 GMT   |   Update On 2019-03-20 10:34 GMT
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலம் மாவட்டம் கருமந்துறை விநாயகர் கோவிலில் நாளை மறுநாள் சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். #LSPolls #EdappadiPalaniswami
சேலம்:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி விட்டன.

அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். மேலும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்தும் ஆதரவு திரட்டி வருகிறார்கள். தொண்டர்களும் தங்கள் கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் இருந்து நாளை மறுநாள் (22-ந் தேதி) பிரசாரத்தை தொடங்குகிறார். வழக்கமாக எந்த தேர்தல் தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை வெற்றி விநாயகர் கோவிலில் தரிசனம் செய்து பிரசாரத்தை தொடங்குவார். வழக்கம் போல இந்த பாராளுமன்ற தேர்தலுக்கும் அங்கிருந்தே பிரசாரத்தை தொடங்குகிறார்.

அதற்காக நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் எடப்பாடி பழனிசாமி கருமந்துறைக்கு செல்கிறார். அங்கு சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரான கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் சுதீசை ஆதரித்து ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டம் பாளையத்தில் பேசுகிறார்.

பின்னர் வாழப்பாடியிலும் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மாலையில் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கு வரும் எடப்பாடி பழனிசாமி சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் தர்மபுரி மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் சூறாவாளி சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தொடர் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார். மேலும் இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்ட மன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். #LSPolls #EdappadiPalaniswami

Tags:    

Similar News