செய்திகள் (Tamil News)

மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. புகார்

Published On 2019-04-06 00:56 GMT   |   Update On 2019-04-06 00:56 GMT
முதலமைச்சர் பற்றி தவறாக விமர்சனம் செய்யும் மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. புகார் மனு அளித்துள்ளது. #ADMK #DMK #MKStalin
சென்னை:

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம், அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் அளித்த புகார் மனுக்களில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அ.ம.மு.க. வேட்பாளர்கள் சுயேச்சையாக கருதப்படுகின்றனர். அவர்களுக்கு பிரசாரம் செய்துவரும் டி.டி.வி.தினகரனை மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி நட்சத்திர பேச்சாளராக கருத முடியாது. ஆனால் அவர்கள் அ.ம.மு.க. கட்சியாக தங்களை விளம்பரப்படுத்தி துண்டு பிரசுரங்கள் மூலமாகவும், சுவர் விளம்பரங்கள் செய்தும், கூட்டங்களில் பேசியும் வருகின்றனர். இதற்கான செலவுகளை அந்தந்த வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்க வேண்டும்.

தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்களின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்து பல கோடி பணம் கைப்பற்றப்பட்டது. அதுபற்றிய விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், 3-ந் தேதி திருப்பூரில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை மீது பொய் குற்றச்சாட்டுகளை அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இது இந்த இரண்டு துறைகளையும் பற்றிய எதிர்மறையான எண்ணங்களை மக்கள் மனதில் ஏற்படுத்திவிடும். எனவே மு.க.ஸ்டாலின் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வங்கிகளில் 5 பவுன் வரை விவசாயிகள் அடமானம் வைத்து பெற்றுள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் தங்க நகைகளை அடமானம் வைத்து வேளாண்மை கடன் பெற தமிழகத்தில் சட்டம் இல்லை. இது தெரிந்தும் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதால், அவர் தவறான வாக்குறுதிகளை அளித்ததாக கருதி அவர் மீது தேர்தல் நடத்தை விதிமீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.மு.க.வின் தொழில்நுட்ப பிரிவு மக்களிடையே பிரிவினையை தூண்டும் விதமாகவும், கலவரத்தை ஏற்படுத்தும் விதத்திலும் சமூக வலைத்தளங்களில் பொய்பிரசாரம் செய்கிறது. உரிய நடவடிக்கை எடுப்பதோடு அந்த பிரசாரங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

கோடநாடு கொலை வழக்கோடு முதல்-அமைச்சரையும் சம்பந்தப்படுத்தி, அவரது பெயரை கெடுக்கும் நோக்கத்தில் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். இதுதொடர்பாக அவருக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதுதொடர்பான வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் முடிந்துவிட்டதாக கூறி மீண்டும் அதுபற்றி பேசி வருகிறார். ஆனால் அந்த வழக்கின் சாட்சி விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் மீது 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. வக்கீல் எம்.வேணுகோபால் கொடுத்த புகாரில், “4-ந் தேதியன்று கோவையில் பிரசாரம் செய்த மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை மிகக்கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்தார். சென்னையில் வருமான வரித் துறையின் சோதனைக்கு உள்ளான சபேசன் என்பவருடன் அமைச்சரை இணைத்து பேசினார்.

இதனால் வாக்காளர்கள் மத்தியில் அமைச்சரை பற்றிய தவறான எண்ணம் உருவாகக் கூடும். எனவே, தேர்தல் ஆணையம் மு.க.ஸ்டாலின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #DMK #MKStalin
Tags:    

Similar News