செய்திகள் (Tamil News)

கர்நாடகாவில் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது - நாளை மறுநாள் வாக்குப்பதிவு

Published On 2018-05-10 11:52 GMT   |   Update On 2018-05-10 11:52 GMT
கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக தேர்தல் களத்தில் சூடு பிடிக்கும் பிரசாரங்கள் நடந்து வந்த நிலையில், மாலை 5 மணியுடன் பிரசாரங்கள் ஓய்ந்தது. #KarnatakaElections2018
பெங்களூர்:

கர்நாடக மாநில சட்ட சபைக்கு நாளை மறுநாள் சனிக்கிழமை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் முடிவு 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டு இருப்பதால் அங்கு ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க.  காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

224 தொகுதிகளிலும் கடந்த 2 மாதமாக தீவிர தேர்தல் பிரசாரம் நடந்தது. இந்த நிலையில் ஜெயநகர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால், அந்த தொகுதி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் 223 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.



கடந்த சில தினங்களாக 223 தொகுதிகளிலும் அனல் பறக்கும் உச்சக்கட்ட பிரசாரம் நடந்தது. பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, கட்சித் தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகள் தீவிர ஓட்டு வேட்டை நடத்தினார்கள்.

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சோனியா, ராகுல் மற்றும் முன்னாள் மத்திய மந்திரிகள் பிரசாரம் செய்தனர். தேவேகவுடா தலைமையிலான மதச் சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிந்த நிலையில், இன்று காலை முதல் பா.ஜ.க., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்கள், தொண்டர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.



மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிந்தது என்றாலும் நாளை மாலை 5 மணி வரை வீடு, வீடாக சென்று அமைதியான முறையில் வாக்குச் சேகரிக்க எந்த தடையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்சித் தொண்டர்கள் நாளை வீடு, வீடாக சென்று பூத் சிலிப் வழங்கி ஓட்டு சேகரிக்க உள்ளனர்.

நாளை இரவு எந்த பிரசார பணியிலும், எந்த கட்சியினரும் ஈடுபட கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை மறுநாள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். ஓட்டுப்பதிவை அமைதியான முறையில் நடத்த உள்ளூர் போலீசுடன் இணைந்து பணியாற்ற மத்திய படையினர் சுமார் 50 ஆயிரம் பேர் கர்நாடகாவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 15-ம் ந்தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். #KarnatakaElection2018
Tags:    

Similar News