செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க நீண்ட கால தீர்வு: மத்திய மந்திரி தகவல்

Published On 2018-05-23 23:54 GMT   |   Update On 2018-05-23 23:54 GMT
பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க நீண்டகால தீர்வு முறையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறினார். #RaviShankarPrasad #PetrolDiesel
புதுடெல்லி:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் இந்தியாவில் மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை கடுமையாக உயர்த்தி வருகின்றன.

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகளும், டீசல் விலை 26 காசுகளும் நேற்று உயர்ந்தது. சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80-ஐ தாண்டியது. தொடர்ந்து 10-வது நாளாக எரிபொருட்களின் விலை உயர்ந்துள்ளது.



இந்த நிலையில் டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய சட்டமந்திரி ரவிசங்கர் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் பெட்ரோல், டீசல் உயர்வு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில், “அடிக்கடி எரிபொருட்களின் விலை உயருவது விவாதத்துக்கும், கவலைக்கும் உரிய ஒன்றாகும். இது குறித்த முழுமையான நடைமுறைகளில் மத்திய அரசு மிகவும் தீவிர கவனத்துடன் ஈடுபட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க நீண்டகால முறையில் தீர்வு காண்பதற்கும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது” என்றார்.

எரிபொருட்கள் மீது விதிக்கப்படும் வரி குறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கும்போது, “இந்த வரிகள் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. வரிகளில் கிடைக்கும் வருமானத்தில்தான் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புற சாலைகள் அமைக்கப்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுகிறது. எனவே வரி விதிப்பது தவிர்க்க முடியாதது” என்றார்.  #RaviShankarPrasad #PetrolDiesel
Tags:    

Similar News