செய்திகள்

சொந்த காரில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து செல்லும் ஆசிரியர்

Published On 2018-07-07 06:17 GMT   |   Update On 2018-07-07 06:17 GMT
கர்நாடக மாநிலத்தில் போதிய வாகன வசதி இல்லாததால் மாணவர்களை ஆசிரியரே தனது சொந்த காரில் பள்ளிக்கு அழைத்து செல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மங்களூர்:

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் ராகி கக்லு கிராமத்தில் அரசு பள்ளிக் கூடத்தில் மகாதேவா மஞ்ஜா என்பவர் ஆசிரியராக பணிபுரிகிறார்.

இவர் அங்கு ஆசிரியராக மட்டும் செயல்படவில்லை, பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று விடும் டிரைவராகவும் செயல்படுகிறார்.

பள்ளிக்கு தலைமை ஆசிரியர் இல்லாததால் அவரே பொறுப்பு தலைமை ஆசிரியராக செயல்பட்டு வருகிறார். பள்ளியில் மாணவர்களின் வருகை குறைவாகவே இருந்தது.

பக்கத்து கிராமங்களுக்கு சென்று சிறுவர்களை பள்ளியில் சேருமாறு அழைத்தார். 4 கி.மீ. தொலைவில் பள்ளி இருப்பதாலும், மழை நேரத்தில் பாலத்தை கடந்து செல்வது ஆபத்தானது என்பதாலும் போதிய வாகன வசதி இல்லாததாலும் தங்களால் பள்ளிக்கு வர இயலாது என்று தெரிவித்தனர்.

இதை அறிந்த மகாதேவா பிள்ளைகளை தானே வந்து தனது காரில் அழைத்துச் செல்வதாக உறுதி அளித்தார். அதன்படி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 20 பிள்ளைகள் பள்ளியில் சேர்ந்தனர்.

அவர்களை ஆசிரியர் மகாதேவா தினமும் காலையில் அவர்களது வீட்டுக்கு சென்று தனது காரில் ஏற்றி வந்து பள்ளியில் விடுவார். இரண்டு மூன்று முறை சென்று அழைத்து வருகிறார்.

மாலையில் பள்ளி முடிந்ததும் அதேபோல் அழைத்துச் சென்று வீட்டில் போய் விட்டு விடுகிறார். அவரது முயற்சியால் தற்போது மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. பல பெற்றோர்கள் தாங்களாகவே வாகன ஏற்பாடு செய்து பிள்ளைகளை அனுப்பி வருகிறார்கள்.

8-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளிக்கூடத்தில் ஆரம்பத்தில் 20 மாணவர்களே படித்து வந்தனர். தற்போது 74 மாணவர்கள் வரை சேர்ந்து படிக்கிறார்கள். #Tamilnews
Tags:    

Similar News