செய்திகள்

சர்க்கரையை விட ஆபத்தான செயற்கை சுவையூட்டிகள் - எச்சரிக்கும் ஆயுர்வேத நிபுணர்கள்

Published On 2018-08-03 14:34 GMT   |   Update On 2018-08-03 14:34 GMT
உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் உடையவர்கள் சர்க்கரைக்கு பதிலாக செயற்கை சுவையூட்டிகளை உபயோகித்து வருகின்றனர். அது சர்க்கரையை விட மிகவும் ஆபத்து என ஆயுர்வேத நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். #ArtificialSweetener
புதுடெல்லி:

சர்க்கரை நோய் உலகளாவிய, அனைவரும் எதிர்கொள்ளும் நோய்களில் ஒன்றாகிவிட்டது. இன்றைய கால உணவு முறை அதற்கான மிக முக்கிய காரணங்களில் ஒன்று. சர்க்கரை நோய் உடையவர்கள் இனிப்பான எதையும் சாப்பிட கூடாது என்பது ஆங்கில மருத்துவர்களின் முதல் எச்சரிக்கை ஆகும்.

இதனால், வாழ்நாள் முழுவதும் அவர்கள் இனிப்பை தொடாமல் இருக்க மிகவும் முயற்சி செய்து வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வாக அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதுவே செயற்கை சுவையூட்டி. கலோரீஸ் ஃப்ரீ என சொல்லப்படும் இந்த இனிப்பு சுவை அளிக்கும் செயற்கை சுவையூட்டிகள், முழுக்க முழுக்க வேதிப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன.

இது தற்போது அனைவரும் உபயோகித்து வருகின்றனர். மிகவும் பிரபலமடைந்து வரும் இந்த செயற்கை சுவையூட்டியை குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் உபயோகித்து வருகின்றனர்.



இந்நிலையில், சர்க்கரை நம் உடலுக்கு தரும் ஆபத்துக்களை விட இந்த செயற்கை சுவையூட்டிகளால் ஆபத்துக்கள் அதிகம் என ஆயுர்வேத நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த செயற்கை சுவையூட்டிகள் முழுவதும் வேதிப்பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால், பின்விளைவுகள் மிகவும் கொடுமையாக இருக்கும் என தெரிவிக்கின்றனர்.

இந்த செயற்கை சுவையூட்டிகளை உபயோகித்தால், காலப்போக்கில், நாவின் சுவை நரம்புகள் செயலிழந்து சுவை அறிய இயலாமல் போகும். மேலும், அதிகப்படியான செயற்கை சுவையூட்டிகளின் உபயோகத்தால், கண்பார்வை கோளாறு, ஹார்மோன் குறைபாடு, தூக்கமின்மை, பசியின்மை, மூட்டு வலி, கிட்னி செயலிழப்பு, இரத்த அழுத்த குறைபாடு போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுவையூட்டிகளாக மட்டுமன்றி, பிஸ்கட்டுகள் போன்ற பல்வேறு சுகர் ஃப்ரீ அல்லது கலோரீஸ் ஃப்ரீ என்று விற்பனை செய்யும் அனைத்து உணவு பொருட்களிலும் இந்த செயற்கை சுவையூட்டிகள் பயன்படுத்தப்படுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி ஆயுர்வேத நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். #ArtificialSweetener
Tags:    

Similar News