செய்திகள்

மோடியை விட பெரிய அனகோண்டா பாம்பு இருக்கிறதா? - மந்திரி கருத்துக்கு பாஜக கண்டனம்

Published On 2018-11-04 07:59 GMT   |   Update On 2018-11-04 08:09 GMT
மோடியை விட பெரிய அனகோண்டா பாம்பு இருக்கிறதா? என தெலுங்கு தேசம் கட்சி மந்திரி ராமகிருஷ்ணனுடு கூறிய கருத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. #ChandrababuNaidu #BJP #PMModi

அமராவதி:

ஆந்திர மாநில நிதி மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவருமான எனமல ராமகிருஷ்ணனுடு பிரதமர் மோடியை விமர்சித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மோடியை விட பெரிய அனகோண்டா பாம்பு இருக்கிறதா? சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி மற்றும் பிற தேசிய அமைப்புகளை அவர் விழுங்கி வருகிறார். அவர் எப்படி பாதுகாவலர் ஆவார்?

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராமகிருஷ்ணனுடுவின் கருத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பா.ஜனதா கட்சியின் ஆந்திர மாநில தலைவர் கண்ணா லட்சுமி நாராயணா கூறியதாவது:-

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஊழலின் அரசர் ஆவார். அவர் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் தரம் தாழ்ந்து செயல்படுவார்.

 


நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் வரவேண்டும் என்று கடந்த 2017-ம் ஆண்டில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்த சந்திரபாபு நாயுடு, தற்போது அவரை மோசடியாளராக சித்தரிக்க முயற்சிக்கிறார்.

அனைத்து மோடியாளர்களும் குழு அமைத்துள்ளனர். அந்த குழுவில் வேகமாக சென்று சந்திரபாபு நாயுடு சேர்ந்துள்ளார். ஆனால் அரசியல் வேற்றுமையில் நாட்டை கொள்ளையடிக்க முயற்சித்தால் அது ஒரு போதும் முடியாது.

சந்திரபாபு நாயுடு தனது ஊழல் வரலாறு வெளிப்பட்டு விடும் என்ற அச்சத்தில் இருக்கிறார். இதனால்தான் அவர் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார். #ChandrababuNaidu #BJP #PMModi

Tags:    

Similar News