செய்திகள்

காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- வீரர் ஒருவர் உயிர்த்தியாகம்

Published On 2018-11-25 03:18 GMT   |   Update On 2018-11-25 07:15 GMT
ஜம்மு - காஷ்மீரில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அடிக்கடி ஊடுருவ முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தி சுட்டுக்கொன்று வருகிறார்கள்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு காஷ்மீரின் அனந்த் நாக் மாவட்டம் சிகிபோரா என்ற இடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டம் ஹிபுரா படாகன்ட் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத்துறை மூலம் ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு பாதுகாப்புப்படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பாதுகாப்புப்படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்புப்படையினரும் தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.

பாதுகாப்பு படையினர் தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் யார்? எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. இதேபோல தீவிரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவரும் பலியானார். எனகவுண்டர் நடந்த இடத்தில் இருந்து பாதுகாப்புப்படையினர் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

அந்த பகுதியில் மொபைல் மற்றும் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News