செய்திகள்

மும்பையில் 10 ஆண்டுகளில் 49 ஆயிரம் தீவிபத்துகள் - சட்டசபையில் மந்திரி தகவல்

Published On 2018-11-27 02:26 GMT   |   Update On 2018-11-27 02:26 GMT
மும்பையில் 10 ஆண்டுகளில் 49 ஆயிரத்து 391 தீவிபத்துகள் நடந்ததாகவும், இதில் 609 பேர் பலியானதாகவும் சட்டசபையில் மந்திரி தெரிவித்தார். #RanjitPatil #FireAccident
மும்பை :

மும்பை புறநகர் பாந்திரா குடிசைப்பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 30-ந் தேதி ஏற்பட்ட தீவிபத்து குறித்து சட்டசபையில் கொண்டுவரப்பட்ட கவனஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து மந்திரி ரஞ்சித் பாட்டீல் கூறியதாவது:-

மும்பையில் 2008-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை மொத்தம் 49 ஆயிரத்து 391 தீவிபத்துகள் நடந்துள்ளன. இதில் 33 ஆயிரத்து 946 தீவிபத்துகள் மின்கசிவு காரணமாகவும், 1,116 கியாஸ் கசிவு காரணமாகவும், 14 ஆயிரத்து 329 தீவிபத்துகள் மற்ற பல காரணங்களாலும் நடந்துள்ளன.

இந்த விபத்துகளில் சிக்கி 609 பேர் மற்றும் 5 தீயணைப்பு படையினர் இறந்துள்ளனர்.

மேலும் ரூ. 110.42 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.

10 ஆண்டுகளில் பதிவான தீ விபத்துகளில் 3 ஆயிரத்து 151 விபத்துகள் குடிசைப்பகுதிகளில் பதிவாகியுள்ளன.

மக்கள் நெருக்கடி மிகுந்த மற்றும் குடிசைப்பகுதியில் நடக்கும் தீ விபத்துகளை தடுக்க 17 சிறிய அளவிலான தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் 17 விரைவாக செயல்படும் வாகனங்கள் மற்றும் 3 மினி தீயணைப்பு வாகனங்கள் தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வாங்கப்பட்டுள்ளது.

மேலும் 5 ஆயிரம் தீயணைப்பு வீரர்களுக்கு தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 29-ந்தேதி கமலா மில் காம்பவுண்டில் ஏற்பட்ட தீவிபத்தில் 14 பேரும், சாக்கிநாக்கா பகுதியில் அதே ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த தீ விபத்தில் 12 பேரும் இறந்தது குறிப்பிடத்தக்கது. #RanjitPatil #FireAccident
Tags:    

Similar News