செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் - இந்தியா முழுவதும் பிரியங்கா பிரசாரம்

Published On 2019-01-30 07:20 GMT   |   Update On 2019-01-30 07:20 GMT
பாராளுமன்ற தேர்தலுக்காக நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பிரியங்கா பிரசாரம் செய்வார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறினார். #Parliamentelection #PriyankaGandhi
புதுடெல்லி:

பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் தேர்தல் தேதி அட்டவணை மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது.

இதற்கு இன்னும் 40 நாட்களே அவகாசம் உள்ளதால் தேர்தல் பணிகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக இறங்கி உள்ளன.

தேசிய அளவிலும், மாநில அளவிலும் கூட்டணியை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் பா.ஜனதாவும், காங்கிரசும் மும்முரமாக உள்ளன. இந்த நிலையில் நாடு முழுவதும் தீவிரமாக பிரசாரம் செய்து ஆதரவு திரட்டும் வியூகத்தையும் இரு கட்சிகளும் மேற்கொண்டுள்ளன.

காங்கிரசை பொறுத்தவரை ராகுல்காந்தி மெகா கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரால் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே குடையின்கீழ் கொண்டு வர இயலவில்லை. அதுபோல பிரசார பணிகளையும் கவர்ச்சிகரமாக அவரால் செய்ய முடியவில்லை.

இதையடுத்து ராகுலின் சகோதரி பிரியங்கா தீவிர அரசியலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவராக நியமனம் செய்யப்பட்டார்.

பிரியங்காவுக்கு உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு மண்டலத்தில் உள்ள 40 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த 40 தொகுதிகளிலும் காங்கிரசை வலிமைப்படுத்தி வெற்றி தேடித்தர வேண்டும் என்று அவருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் இந்த மண்டலத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாததால் அந்த 40 தொகுதிகளும் பிரியங்காவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரியங்காவின் அரசியல் பணி எந்த அளவில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. அவர் உத்தரபிரதேசத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கு மட்டும் கவனம் செலுத்துவாரா? அல்லது நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவாரா? என்ற கேள்விக்குறி நீடித்தது.

தற்போது காங்கிரஸ் நிர்வாகிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பிரியங்கா இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் செய்வார் என்று தெரிய வந்துள்ளது. பிரியங்கா பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டதுமே அவர் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று நிறைய மாநிலங்களில் இருந்து அழைப்புகள் சென்ற வண்ணம் உள்ளன.

முசாபர்பூர், ஜோத்பூர் உள்பட பல்வேறு தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் பிரியங்கா தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி உள்ளனர். ஆனால் பிரியங்கா எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது இன்னமும் உறுதியாகவில்லை.

என்றாலும் பிரியங்கா நாடு முழுவதும் பிரசாரம் செய்வது உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியதாவது:-

அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்களாக இருப்பவர்கள் தேசிய பிரசார குழுவில் உறுப்பினராக தானாகவே தேர்வாகி விடுவார்கள். அவர்கள் தேவைக்கு ஏற்ப நாடு முழுவதும் சென்று காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வார்கள்.



பொதுவாக ஒவ்வொரு மாநிலமும் மூத்த தலைவர்களை அழைத்து பிரசாரம் செய்ய வைப்பது உண்டு. அந்த வகையில் பிரியங்காவை எந்தெந்த தொகுதிகளில் அழைக்கிறார்களோ அங்கெல்லாம் அவர் சென்று காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்வார்.

காங்கிரஸ் தலைவராக இருப்பவர்கள் அல்லது பிரதமராக இருப்பவர்கள் நாடு முழுவதும் தன்னிச்சையாக சென்று பிரசாரம் செய்வது என்பது இயலாது. எனவே ராகுலுக்கு உதவும் வகையில் பிரியங்காவின் பிரசாரம் அமையும்.

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பிரியங்கா பிரசாரம் செய்வார். அதோடு அவர் உத்தரபிரதேசத்தில் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 40 தொகுதிகளையும் சேர்த்து கவனித்துக் கொள்வார். பிரியங்காவின் பிரசாரத்தால் மற்ற மாநிலங்களில் ராகுல் திறம்பட பிரசாரத்தை மேற்கொள்ள வாய்ப்பு உருவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே பிரியங்காவை பிரசாரத்துக்கு அழைக்க கடும்போட்டி ஏற்பட்டுள்ளது. இப்போதே பெரும்பாலான மாநில தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு பிரியங்காவை தங்கள் தொகுதிக்கு அழைத்து வர பேச்சுவார்த்தை நடத்தியபடி உள்ளனர்.

பிரியங்கா தற்போது அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இருக்கிறார். குடும்ப பயணமாக சென்றுள்ள அவர் நாளை மறுநாள் டெல்லி திரும்புகிறார். அதன் பிறகு அவரது அரசியல் அதிரடிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி முதல் வாரத்தில் பிரியங்கா உத்தரபிரதேச மாநிலம் செல்ல உள்ளார். அங்கு நடக்க உள்ள கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேச உள்ளார். அதன் பிறகு பிரியங்கா எங்கெங்கு செல்வார் என்பது தெரியவரும்.

பிரியங்காவின் அரசியல் வருகையை பிரமாண்டமாக தொடங்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக இன்னும் 2 வாரங்களில் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட குழுவான காரிய கமிட்டி கூட உள்ளது. நாளை தொடங்கும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு காங்கிரஸ் காரிய கமிட்டி கூடும்.

காங்கிரஸ் காரிய கமிட்டியில் பிரியங்காவும் கலந்து கொள்வார். அங்கு அவரை வரவேற்று மூத்த தலைவர்கள் பேசுவார்கள். பிரியங்கா இந்த கூட்டத்தில் பேச உள்ளார்.

தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுலுக்கு அடுத்தபடி 2-வது இடத்தில் பிரியங்கா அமர வைக்கப்படுவார் என்று தெரிகிறது. அப்போது பிரியங்கா நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்யும் திட்டம் வகுக்கப்படும்.

எனவே விரைவில் நடைபெற உள்ள காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் பிரியங்காவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #Parliamentelection #PriyankaGandhi

Tags:    

Similar News