இந்தியா
சிறுத்தை

பிளாஸ்டிக் தண்ணீர் கேனில் சிக்கிய தலையுடன் மாயமான சிறுத்தை: 2 நாட்களுக்கு பின் பிடிபட்டது

Published On 2022-02-16 09:10 GMT   |   Update On 2022-02-16 12:41 GMT
பத்லாபூர் கிராமப் பகுதியில் சிறுத்தை இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, வனத்துறை அதிகாரிகள் விரைந்து சிறுத்தையை சுற்றிவளைத்து பிடித்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் பத்லாபூர் கிராமம் அருகே பிளாஸ்டிக் தண்ணீர் கேனில் தலை சிக்கிய நிலையில் சிறுத்தை ஒன்று இருந்துள்ளது. அந்த கேனில் இருந்து சிக்கிய தலையை எடுக்க தீவிர முயற்சி செய்துக் கொண்டிருந்தது. இதனை அவ்வழியாக சென்ற நபர் ஒருவர், வீடியோ எடுத்து வனத்துறைக்கு அனுப்பி தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சோதனையிட்டனர். ஆனால் அதற்குள் சிறுத்தை காட்டிற்குள் சென்றுவிட்டுள்ளது. இந்த சிறுத்தையை மீட்க சஞ்சய் காந்தி தேசிய பூங்கா வனத்துறை அதிகாரிகள், வனவிலங்கு நலச் சங்க உறுப்பினர்கள், கிராம மக்கள் என சுமார் 30 பேர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

சிறுத்தை குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி அக்கிராம மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், சிறுத்தை குடியிருப்புக்குள் புகுந்துவிடும் அபாயம் இருப்பதாலும், நகர்ப்புற மற்றும் கிராமப்புறத்தை இணைக்கும் பெரிய பகுதியில் சுற்றித் திரிவதாலும் அதைப் பிடிப்பதில் வனத்துறை அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு பத்லாபூர் கிராமப் பகுதியில் சிறுத்தை இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, வனத்துறை அதிகாரிகள் விரைந்து சிறுத்தையை சுற்றிவளைத்து பிடித்தனர்.

இதுகுறித்து விலங்குகள் நலச் சங்க நிறுவனர் பவன் சர்மா கூறியிருப்பதாவது:-

தண்ணீர் கேன் தலையில் சிக்கிய நிலையில் இருந்த சிறுத்தை மீது தூரத்தில் இருந்து மயக்க ஊசி செலுத்தப்பட்டது. சிறுத்தை மயக்கமடைந்ததை அடுத்து மீட்புக் குழுவினர் தலையில் சிக்கி இருந்த தண்ணீர் கேனை எடுத்தனர்.

சிறுத்தை இரண்டு நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் சோர்வடைந்துள்ளது. காட்டில் விடுவதற்கு முன், அடுத்த 24 முதல் 48 மணி நேரம் வரை கண்காணிப்பில் வைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. ஹிஜாப்பை அகற்ற சொன்னதால் கர்நாடகாவில் 30 மாணவிகள் கல்லூரியில் இருந்து வெளிநடப்பு
Tags:    

Similar News