இந்தியா (National)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மியின் வெற்றி புரட்சிகரமானது- அரவிந்த் கெஜ்ரிவால்

Published On 2022-03-10 12:05 GMT   |   Update On 2022-03-10 12:05 GMT
பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றியின் மூலம், கெஜ்ரிவால் பயங்கரவாதி அல்ல. நாட்டை கொள்ளையடிப்பவர்களே பயங்கரவாதிகள் என்று மக்கள் பதிலளித்துள்ளனர் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சி ஒன்று இன்னொரு மாநிலத்தில் வெற்றிக் கொடியை நாட்டி இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த வரலாற்று சாதனையை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி நிகழ்த்திக் காட்டி இருக்கிறது.

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களைவிட அதிக தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது. ஆட்சியமைக்க 59 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், 91 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி பஞ்சாபில் முதல் முறையாக ஆட்சி பிடிக்கிறது.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மிக்கு கிடைத்துள்ள வெற்றி புரட்சிகரமானது என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற எனது இளைய சகோதரர் பகவந்த் மான் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆம் ஆத்மி 90 இடங்களைத் தாண்டியுள்ளது. முடிவுகள் இன்னும் வருகின்றன. மக்கள் எங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். நாங்கள் அதை உடைக்க மாட்டோம். இந்த நாட்டின் அரசியலை மாற்றுவோம்.

புரட்சி மாற்றத்திற்கான நேரம் இது. அனைவரும் ஆம் ஆத்மியில் சேருமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆம் ஆத்மி கட்சி மட்டுமல்ல. அதற்கும் மேலானது. இது ஒரு புரட்சியின் பெயர். பஞ்சாப்பின் வெற்றி மூலம் மக்கள் என்னுடன் பேசினார்கள்.கெஜ்ரிவால் பயங்கரவாதி அல்ல. அவர் நாட்டின் மகன். உண்மையான தேசபக்தர் என்று..

பஞ்சாப் மக்கள் அதிசயங்களை நிகழ்த்தியுள்ளனர். முதலில் டெல்லியில் ஒரு புரட்சி, பிறகு பஞ்சாபில் ஒரு புரட்சி. இது நாட்டுக்கும் பரவும்.

ஆம் ஆத்மி எனும் சாமானியர் சரண்ஜித் சிங் சன்னி, நவ்ஜோத் சிங் சித்து, அமரீந்தர் சிங், பிக்ரம் மஜிதியா ஆகியோரை தோற்கடித்துள்ளார். ஆனால் இவ்வளவு பெரிய பெரும்பான்மை எங்களையும் பயமுறுத்துகிறது. அதற்காக நாங்கள் திமிர் காட்ட மாட்டோம்.

கடந்த 75 ஆண்டுகளாக பிற கட்சிகள் பிரிட்டிஷ் முறையை உயிர்ப்புடன் வைத்திருந்தது வருத்தமளிக்கிறது. நாட்டின் மக்களை ஏழைகளாகவும் வைத்திருந்தது. ஆம் ஆத்மி இந்த முறையை மாற்றியது. நாங்கள் நேர்மையான அரசியலைத் தொடங்கினோம்.

நாட்டை முன்னேற விடாமல் தடுக்கும் பெரும் சக்திகள் இங்கு உள்ளன. பஞ்சாபில் சதிகள் நடந்துள்ளன. ஆம் ஆத்மிக்கு எதிராக கூட்டு சேர்ந்து கெஜ்ரிவால் ஒரு பயங்கரவாதி ஒன்று கூறியது.

ஆனால், இந்த தேர்தல் வெற்றியின் மூலம், கெஜ்ரிவால் பயங்கரவாதி அல்ல. நாட்டை கொள்ளையடிப்பவர்களே பயங்கரவாதிகள் என்று மக்கள் பதிலளித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. பிரபல நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா தோல்வியடைந்தார்

Similar News