இந்தியா (National)
மாநிலங்களவையில், ரூபா கங்குலி கண்ணீர் விட்டபடி பேசிய காட்சி.

மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்கள்: ரூபா கங்குலி எம்.பி. கதறல்

Published On 2022-03-26 01:59 GMT   |   Update On 2022-03-26 01:59 GMT
8 பேர் படுகொலைக்கு மூளையாக செயல்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியை கைது செய்ய முதல்-மந்திரியும், கட்சித்தலைவருமான மம்தா பானர்ஜி உத்தரவிட்டார்.
புதுடெல்லி :

மேற்கு வங்காளத்தின் பிர்பும் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கடந்த 21-ந்தேதி மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்கும் நோக்கில் போக்துய் கிராமத்தில் 10 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் 2 குழந்தைகள், 6 பெண்கள் என 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்களின் படுகொலை சம்பவம் மாநிலத்தையும் தாண்டி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8 பேர் படுகொலைக்கு மூளையாக செயல்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியை கைது செய்ய முதல்-மந்திரியும், கட்சித்தலைவருமான மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். அதன்படி நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த படுகொலை சம்பவம் நேற்று நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியது. மேற்கு வங்காளத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி. ரூபா கங்குலி, இந்த பிரச்சினையை மாநிலங்களவையில் எழுப்பினார்.

பூஜ்ஜிய நேரத்தின்போது இதை எழுப்பி அவர் கூறுகையில், ‘மக்கள் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டு உள்ளனர். போலீசார் மீது நம்பிக்கை இல்லை. கொல்லப்பட்டவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு, வீட்டுக்குள் பூட்டி வைத்து தீ வைக்கப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது’ என்றார்.

அவர் மேலும் கூறும்போது, ‘மேற்கு வங்காளம் இந்தியாவின் ஒரு பகுதிதான். நாம் வாழ்வதற்கு ஒரு உரிமை இருக்கிறது. மேற்கு வங்காளத்தில் பிறந்தது குற்றமல்ல’ என்றும் தெரிவித்தார்.

இதை கூறும்போதே உடைந்து அழுத ரூபா கங்குலி, மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

இது மாநிலங்களவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரம் ரூபா கங்குலிக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சில உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்றும் கோஷமிட்டனர்.

அப்போது ரூபா கங்குலிக்கு ஆதரவாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். உறுப்பினர்களை அமைதி காக்குமாறு அறிவுறுத்திய அவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ், சபையை சுமுகமாக நடத்த முயன்றார்.ஆனால் இரு தரப்பு உறுப்பினர்களும் தங்கள் கோஷங்களை தொடர்ந்ததால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவையை சுமார் 25 நிமிடங்களுக்கு ஹரிவன்ஷ் ஒத்தி வைத்தார். இதனால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News