55 பயணிகள் விமானத்தை தவறவிட்ட விவகாரம்: விமான நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்
- ‘கோ பர்ஸ்ட்’ நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கமும் பெற்றது.
- இந்த விவகாரத்தை சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரித்தது.
புதுடெல்லி :
'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த 9-ந்தேதி பெங்களூருவில் இருந்து டெல்லி சென்றது. இந்த விமானத்தில் ஏறுவதற்காக 55 பயணிகள் பெங்களூரு விமான நிலைய முனையத்தில் இருந்து விமானத்துக்கு அழைத்து செல்லப்படும் பஸ்சுக்காக காத்திருந்தனர்.
ஆனால் அவர்களை ஏற்றாமலேயே இந்த விமானம் அங்கிருந்து கிளம்பி விட்டது. இதனால் அந்த பயணிகள் விமானத்தை தவறவிட்டனர்.
இந்த விவகாரத்தை சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரித்தது. இது தொடர்பாக 'கோ பர்ஸ்ட்' நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கமும் பெற்றது. இந்த விசாரணை முடிவில் அந்த விமான நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து நேற்று உத்தரவிட்டது.
விமானத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக முனைய ஒருங்கிணைப்பாளர், வணிக ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இடையே சரியான தகவல் தொடர்பு இல்லாதது கண்டறியப்பட்டதாக இயக்குனரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.