மும்பையில் சினிமாவை மிஞ்சும் விபத்து: சுங்கசாவடியில் 6 கார்கள் மோதியதில் 3 பேர் பலி
- சுங்க சாவடியில் கட்டணம் செலுத்துவதற்காக வரிசையில் காத்திருந்த மேலும் 6 கார்கள்மீது, அந்த கார் மோதி, விபத்தை ஏற்படுத்தியது.
- மின்னல் வேகத்தில் வந்து விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிய நபருக்கும், விபத்தில் லேசாகக் காயம் ஏற்பட்டது.
மும்பை:
மும்பையில் பாந்த்ரா-ஒர்லி கடல் பாலம் மிகவும் பிரபலமாகும். இந்தப் பாலத்தில் அடிக்கடி தற்கொலைச் சம்பவங்கள் நடக்கிறது.
காரை கடல் பாலத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டு, கடலுக்குள் குதித்து பலர் தற்கொலை செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணிக்கு பாலத்தின் அருகே உள்ள பாந்த்ரா சுங்கச்சாவடியில் ஏராளமான வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன.
அப்போது வொர்லியில் இருந்து கார் ஒன்று, கடல் பாலத்தில் பாந்த்ராவை நோக்கி மின்னல் வேகத்தில் வந்தது. டோல்கேட் அருகில் வந்தபோது அந்த கார், முன்னால் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றின்மீது மோதியது.
மோதிய வேகத்தில் சம்பவ இடத்திலிருந்து அதனை ஓட்டி வந்தவர் வேகமாகச் செல்ல முயன்றார்.
அப்போது சுங்க சாவடியில் கட்டணம் செலுத்துவதற்காக வரிசையில் காத்திருந்த மேலும் 6 கார்கள்மீது, அந்த கார் மோதி, விபத்தை ஏற்படுத்தியது.
கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொண்டதால், பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டது. இதில் மொத்தம் 6-க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன.
சில கார்கள் நொறுங்கின. சினிமா காட்சிகளையே மிஞ்சும் அளவுக்கு நடந்த இந்த கோர விபத்து சில நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டது.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். அதில் 3 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது.
மின்னல் வேகத்தில் வந்து விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிய நபருக்கும், விபத்தில் லேசாகக் காயம் ஏற்பட்டது. காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர், குஜராத்தைச் சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரியவந்தது. அந்த காரைப் பறிமுதல் செய்து, காரை ஓட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
அவர் தற்கொலை செய்யும் எண்ணத்துடன் காரை ஓட்டி வந்தாரா? என விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்தால், மும்பை கடல் பாலத்தில் 6 கிலோமீட்டர் தூரத்துக்கு கார்களும் இதர வாகனங்களும் அணிவகுத்து நின்றன. விடிய விடிய போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று அதிகாலையில்தான் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.