காரில் பசுவை கடத்தியதாக 12 ஆம் வகுப்பு மாணவனை சுட்டுக் கொலை செய்த பசு பாதுகாப்பு கும்பல்
- ரெனால்ட் டஸ்ட்டர் மற்றும் டொயோட்டா பார்ட்சியூனர் கார்களில் பசு கடத்தப்படுவதாக குண்டர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது
- கார் நின்றவுடன் அவர்கள் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில் ஆர்யன் மீது மேலும் ஒரு குண்டு பாய்ந்ததில் அவர் உயிரிழந்தார்.
அரியானாவில் காரில் பசுவைக் கடத்தியதாகத் தவறாக நினைத்து 12 வகுப்பு மாணவனை 5 பசு பாதுகாப்பு குண்டர்கள் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் பரிதாபாத் நகரில் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி இரவு ரெனால்ட் டஸ்ட்டர் மற்றும் டொயோட்டா பார்ட்சியூனர் கார்களில் பசு கடத்தப்படுவதாக தங்களுக்கு கிடைத்த தகவலை அடுத்து சட்டவிரோதமான துப்பாக்கிகளுடன் கிளம்பிய கிருஷ்ணா,அணில் கௌசிக், வருண்,சவுரப் ஆகிய 5 பசு பாதுகாப்பு குண்டர்கள், படேல் சவுக் சாலையில் வந்த ரெனால்ட் டஸ்ட்டர் டாக்சி காரை நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் டாக்சி டிரைவர் ஹர்ஷித் காரை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
இந்நிலையில் அந்த காரை சுமார் 30 கிலோமீட்டர்க்கு தங்களது வாகனத்தில் துரத்திச் சென்ற பசு பாதுகாப்பு குண்டர்கள், காருக்குள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர், இதில் தனது நண்பர்களுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு மாணவன் ஆர்யன் மிஸ்ரா மீது குண்டு பட்டு படுகாயமடைந்துள்ளார். கார் நின்றவுடன் அவர்கள் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில் ஆர்யன் மார்பில் மேலும் ஒரு குண்டு துளைத்தது.
அதன்பின்னரே தாங்கள் தவறான காரை துரத்தியுள்ளோம் என்று அறிந்த பசு பாதுகாப்பு குண்டர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஆரியன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் தற்போது பசு பாதுகாலவர்கள் ஐவரையும் கைது செய்துள்ளனர். அவர்களின் வாக்குமூலத்தின் பேரில் இந்த கொலை பசு கடத்தல் தொடர்புடையது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.