முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: கேரள எம்.பி. ஹிபி ஏடன்
- முல்லை பெரியாறு அணையால் அருகிலுள்ள பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
- தண்ணீர் தமிழகத்திற்கு, பாதுகாப்பு கேரளத்திற்கு என்பதே எங்களின் கோஷம்.
பாராளுமன்ற மாநிலங்களவையில் கேரளா எம்.பி. ஹிபி ஏடன் பேசும்போது, "முல்லை பெரியாறு அணையில் புதிய அணை கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
மேலும், "முல்லை பெரியாறு அணையால் அருகிலுள்ள பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தண்ணீர் தமிழகத்திற்கு, பாதுகாப்பு கேரளத்திற்கு என்பதே எங்களின் கோஷம். மத்திய அரசு புதிய அணை கட்டி கேரளத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.
முல்லை பெரியாறு அணையில் நீர் மட்டத்தை உயர்த்தக் கூடாது என கேரளா தெரிவித்து வந்த நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்று அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதி பெற்றது. தமிழ்நாட்டின் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்கள் பயனடைகின்றன.
தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கேரளா எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை பலமாகவே இருக்கிறது என உச்சநீதிமன்றமும் வல்லுநர்கள் குழுவும் திட்டவட்டமாக தெரிவிததுவிட்ட நிலையிலும் கேரளா மீண்டும் மீண்டும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணையை பல ஆண்டுகளாக கேரளா எதிர்த்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகிவிட்டதாக கூறி புதிய அணை கட்ட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.