இந்தியா

அதானி குழுமம் மீதான புகார்.. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைக்கிறது உச்சநீதிமன்றம்

Published On 2023-02-17 11:39 GMT   |   Update On 2023-02-17 11:39 GMT
  • சீலிட்ட உறையில் மத்திய அரசு அளிக்கும் ஆலோசனையை ஏற்க நீதிபதிகள் ஏற்க மறுப்பு
  • இந்த விவகாரத்தில் விவகாரத்தில் வெளிப்படுத்த தன்மை இருக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து

புதுடெல்லி:

அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிந்தது. இந்த விவகாரம் இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் அதானி குழும முறைகேடு குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து விசாரிக்கக் கோரி எம்.எல்.சர்மா, பிரசாந்த் பூஷன், காங்கிரசைச் சேர்ந்த ஜெயா தாக்கூர், வழக்கறிஞர் விஷால் திவாரி உள்ளிட்டோர் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்கு முன்னதாக மத்திய அரசின் சார்பில், இந்த விவகாரத்தை முழுமையாக வெளிப்படைத்தன்மையுடன் விசாரிக்க தயாராக இருப்பதாகவும், முதலீட்டாளர்களின் நலனை கருதி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

இதனை நீதிபதிகள் நிராகரித்ததுடன், மனுதாரர்களின் யோசனையை கேட்டது. இந்த விவகாரத்தில், குறிப்பாக இந்த ஒட்டுமொத்த விவகாரத்தையும் உயர் அதிகாரம் படைத்த குழு விசாரிக்க வேண்டும் என மனுதாரர் விஷால் திவாரி தெரிவித்ததையும், உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் அதானி குழுமம் மீதான அறிக்கை குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என பிரசாந்த் பூஷன் தெரிவித்த கருத்தையும் நீதிபதிகள் பதிவு செய்துகொண்டனர்.

9 மத்திய விசாரணை அமைப்புகளைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் தரப்பிலும் வாதம் முன்வைக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இதில் தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு எவ்வித குழுவையும் அமைக்க மாட்டோம் என தெளிவுபடுத்தினர். மேலும், ஹிண்டன்பெர்க் அறிக்கையை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என்று கூறினர்.

இந்த விவகாரத்தில் வெளிப்படுத்த தன்மை இருக்க வேண்டும் என விரும்புகிறோம். முதலீட்டாளர்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. சீலிட்ட உறையில் மத்திய அரசு அளிக்கும் ஆலோசனையை ஏற்க மாட்டோம். குழுவை நாங்களே ஏற்படுத்துவோம். இந்த விவகாரத்தில் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் தோல்வி என கருத முடியாது, என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News