முதுகில் பேக்.. கையில் அட்டைப்பெட்டி.. அதிகாலை நேரத்தில் நடந்து செல்லும் அப்தாப்: வெளியான சிசிடிவி வீடியோ
- வீடியோவை போலீசார் சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
- கடுமையான விசாரணைக்குப் பிறகு அப்தாப் உண்மையை கூறத் தொடங்கி உள்ளான்
புதுடெல்லி:
டெல்லியில் காதலனுடன் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா என்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மே மாதம் 18ம் தேதி ஷ்ரத்தாவுக்கும், காதலன் அப்தாப் அமீன் பூனாவாலாவுக்கும் இடைகிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் ஷ்ரத்தா, காதலன் அப்தாவால் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையை மறைக்க, உடலை 35 துண்டுகளாக வெட்டி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச்சென்று காட்டில் வீசி உள்ளான் அப்தாப்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக அப்தாப் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இது ஒருபுறமிருக்க ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக மீட்கப்படுகின்றன. அப்பகுதியில் பதிவான சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்துவருகின்றனர். ஷ்ரத்தாவின் தலையை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் அப்தாப் தனது வீட்டுக்கு வெளியே அதிகாலையில் நடந்து செல்லும் போது பதிவான சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. அதில், அவன் தனது முதுகில் பேக் மாட்டி உள்ளார். கையில் அட்டைப் பெட்டி வைத்திருந்தான். இதனால் அவன் ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை எடுத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த வீடியோவை போலீசார் சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அக்டோபர் 18ம் தேதி பதிவு செய்யப்பட்ட இந்த சிசிடிவி காட்சி, இந்த கொடூரமான கொலை வழக்கில் வெளிவந்த முதல் சிசிடிவி வீடியோ பதிவாகும்.
இருட்டில் மங்கலாக பதிவான அந்த வீடியோவில், ஒரு நபர் முதுகுப்பை மாட்டிக்கொண்டு கையில் அட்டைப்பெட்டியுடன் தெருவில் நடந்து செல்வது தெரிகிறது. அவரது முகம் தெளிவாக தெரியவில்லை. ஆனால் அது அப்தாப் என்று போலீசார் கூறுகின்றனர்.
இன்று அதிகாலை, அப்தாப் அமீன் பூனாவாலாவின் குடியிருப்பில் இருந்து கனமான மற்றும் கூர்மையான வெட்டும் கருவிகளை போலீசார் மீட்டனர். அவை ஷ்ரத்தாவின் உடலை வெட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கடுமையான விசாரணைக்குப் பிறகு அப்தாப் உண்மையை கூறத் தொடங்கி உள்ளான். அவன் கொடுத்த தகவலின்பேரில் சத்தர்பூர் குடியிருப்பில் இருந்து முக்கிய ஆதாரங்களை போலீசார் மீட்டுள்ளனர். அப்தாபின் குருகிராம் பணியிடத்தில் இருந்து நேற்று கருப்பு பாலிதீன் பையையும் போலீசார் மீட்டனர்.