நிலத்தகராறில் புதைக்கப்பட்ட வாலிபர்: தெருநாய்களால் உயிர் பிழைத்த அதிசயம்
- ஆக்ராவில் 24 வயது இளைஞர் ஒருவர் நிலத்தகராறில் உயிருடன் புதைக்கப்பட்டார்.
- வாலிபரை புதைத்த 4 பேரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் 24 வயது இளைஞர் ஒருவர் நிலத்தகராறில் உயிருடன் புதைக்கப்பட்டார். அதன்பின் தெரு நாய்களால் தோண்டி எடுக்கப்பட்ட வினோதம் நடைபெற்றுள்ளது.
ஆக்ராவைச் சேர்ந்த வாலிபர் ரூப் கிஷோர் (24). கடந்த மாதம் 18-ம் தேதி அன்று ஆர்டோனி பகுதியில் சென்று கொண்டிருந்த தன்னை அங்கித், கவுரவ், கரண், ஆகாஷ் என 4 பேர்தாக்கியதாக குற்றம் சாட்டினார்.
கழுத்தை நெரித்ததில் அவர் இறந்துவிட்டார் எனக்கருதி அவர்களது பண்ணையில் கிஷோரை புதைத்தனர். கிஷோர் புதைக்கப்பட்ட இடத்தை அங்கு சுற்றித் திரிந்த தெருநாய்கள் கூட்டம் தோண்டத் தொடங்கியது.
அப்போது கிஷோரின் சதையை நாய்கள் கடித்ததில் அவருக்கு திடீரென சுயநினைவு திரும்பியது. இதனால் அங்கிருந்து எழுந்த அவர், அப்பகுதியில் இருந்து வெளியேறினார். உள்ளூர்வாசிகள் உதவியுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதுதொடர்பாக கிஷோரின் தாய் கூறுகையில், 4 பேர் தனது மகனை வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து அழைத்துச் சென்றனர் என குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து விசாரணை நடந்துவருகிறது என்றும், தப்பிச்சென்ற 4 பேரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் போலீசார் தெரிவித்தனர்.
நிலத்தகராறு காரணமாக புதைக்கப்பட்ட வாலிபர் ஒருவர், தெருநாய்களால் உயிர் பிழைத்த அதிசயம் அப்பகுதியில் ஆச்சரியத்தை
ஏற்படுத்தியுள்ளது.