இந்திய பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு
- சந்திப்புக்கு பிறகு பிரதமருக்கு நன்றி தெரிவித்து சுந்தர் பிச்சை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
- பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவின் தொழில்நுட்ப மாற்றம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது
புதுடெல்லி:
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது புதுமை, தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு விஷயங்களைப் பற்றி ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பு பற்றி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'சுந்தர் பிச்சை, உங்களை சந்தித்து புதுமை, தொழில்நுட்பம் மற்றும் பல விஷயங்கள் குறித்து விவாதித்ததில் மகிழ்ச்சி. மனித சமுதாய முன்னேற்றம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு உலகம் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவது முக்கியம்' என கூறி உள்ளார்.
பிரதமர் மோடியை சந்தித்த பிறகு பிரதமருக்கு நன்றி தெரிவித்து சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவின் தொழில்நுட்ப மாற்றம் மிக வேகமாக வளர்ந்து வருவதை பார்க்கிறேன். வருங்காலத்தில் இந்தியாவுடன் தொழில்நுட்ப ரீதியிலான நல்லுறவை எதிர்நோக்குகிறேன். ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்றதற்கு முழு ஆதரவை அளிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.