சொந்தமாக கார் இல்லை... அமித்ஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
- வேட்பு மனுவோடு இணைக்கப்பட்ட சொத்து விவர பட்டியலில், சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கு ரூ.931.83 கோடி சொத்துகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா குடும்பத்துக்கு ரூ.483 கோடி சொத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:
18-வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அந்த வகையில் 3-வது கட்ட தேர்தலில் குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும் மே 7-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில் குஜராத்தின் காந்தி நகர் மக்களவை தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அவர் தனது சொத்து விவரங்களை தெரிவித்துள்ளார்.
அதன்படி தனக்கு ரூ.20 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள், ரூ.16 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் என மொத்தமாக ரூ.36 கோடி சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு சொந்தமாக கார் இல்லை என்றும், ரூ.15.77 லட்சம் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தன்னிடம் ரூ.72 லட்சம் மதிப்பிலான நகைகளும், தனது மனைவியிடம் ரூ.1.10 கோடி மதிப்பிலான நகைகளும் இருப்பதாக தெரிவித்துள்ள அமித்ஷா, தனக்கு ஆண்டு வருமானமாக ரூ.75.09 லட்சம் கிடைப்பதாக கூறியுள்ளார்.
இதேபோல் ஆந்திராவில் மே 13-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுடன் நடைபெறும் சட்டசபை தேர்தலில் சித்தூர் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனுவோடு இணைக்கப்பட்ட சொத்து விவர பட்டியலில், சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கு ரூ.931.83 கோடி சொத்துகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடு மனைவி புவனேஸ்வரியின் பெயரில் ரூ.895.47 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் பெயரில் ரூ.36.35 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் குடும்ப சொத்து மதிப்பு 2019-ம் ஆண்டு இருந்ததை விட 41 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திராவின் இந்துப்பூர் சட்டமன்ற தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக களம் இறங்கும் முன்னணி தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா குடும்பத்துக்கு ரூ.483 கோடி சொத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.