இந்தியா (National)

காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கர்நாடகம் வன்முறையால் பாதிக்கப்படும்: அமித்ஷா பேச்சு

Published On 2023-04-26 04:01 GMT   |   Update On 2023-04-26 04:01 GMT
  • பா.ஜனதாவில் இருந்து வந்த தலைவர்களை வைத்து காங்கிரஸ் ஓட்டு கேட்கிறது.
  • பா.ஜனதாவை சேர்ந்த ஒருவர் தான் கர்நாடக முதல்-மந்திரியாக வருவார்.

பெங்களூரு

கா்நாடக சட்டசபை தேர்தலையொட்டி உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் கர்நாடகம் வந்தார். அவர் நேற்று 2-வது நாளாக பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். பாகல்கோட்டையில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:-

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வளர்ச்சி பின்னோக்கி செவ்லும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்ப அரசியல் இதுவரை இல்லாத அளவுக்கு முன்னிலைக்கு வரும். ஊழல் அதிகமாக நடைபெறும். குறிப்பிட்ட சமூகத்தை கவரும் அரசியலை அக்கட்சி செய்யும். காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வன்முறையால் கர்நாடகம் பாதிக்கப்படும். பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்துள்ள முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி ஆகியோரால் காங்கிரசுக்கு எந்த பலனும் கிடைக்காது.

கர்நாடகத்தில் லிங்காயத் தலைவர்களை காங்கிரஸ் எப்போதும் அவமதித்து வந்துள்ளது. லிங்காயத் சமூகத்தில் வீரேந்திர பட்டீல், நிஜலிங்கப்பா ஆகிய 2 தலைவர்களுக்கு மட்டுமே காங்கிரஸ் கட்சி முதல்-மந்திரி பதவி வழங்கியது. அவர்களையும் அக்கட்சி அவமதித்து கட்சியை விட்டு நீக்கியது. அக்கட்சி நீண்ட காலம் ஆட்சி செய்தது.

பா.ஜனதாவில் இருந்து வந்த தலைவர்களை வைத்து காங்கிரஸ் ஓட்டு கேட்கிறது. இதை பார்க்கும்போது, அக்கட்சியில் தலைவர்கள் இல்லாமல் திவாலாகிவிட்டதை காட்டுகிறது. ஜனதா தளம்(எஸ்) கட்சியை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியை விட்டு அகற்றியது. இப்போது காங்கிரஸ் கட்சி எங்கள் கட்சியின் சில தலைவர்களுடன் ஆட்சியை பிடிக்க பார்க்கிறது. ஆனால் இதை வட கர்நாடக மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது வட கர்நாடகத்தில் கலசா-பண்டூரி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சி நாட்டை 60 ஆண்டு காலம் ஆட்சி செய்தது. மத்தியில் பா.ஜனதா ஆட்சி வந்த பிறகு நாங்கள் செய்த பணிகளில் 10 சதவீதத்தை காங்கிரஸ் 60 ஆண்டுகளில் செய்யவில்லை.

கர்நாடகத்தில் லம்பானி, குருபா மலைவாழ் மக்களுக்கு வீட்டு உரிமை பத்திரத்தை வழங்கினோம். அந்த மக்கள் வசித்த குக்கிராமங்களை வருவாய் கிராமங்களாக மாற்றியுள்ளோம். இதை இந்த இரட்டை என்ஜின் அரசு தான் செய்து காட்டியுள்ளது. காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்காக சித்தராமையா, டி.கே.சிவக்குமார் சண்டை போட்டு கொள்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வராது.

பா.ஜனதாவை சேர்ந்த ஒருவர் தான் கர்நாடக முதல்-மந்திரியாக வருவார். ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம். அந்த கட்சிக்கு நீங்கள் போடும் ஓட்டு காங்கிரசுக்கு செல்லும். காங்கிரசுக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் பா.ஜனதாவை ஆதரிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், கர்நாடகத்தை மேலும் வளர்ச்சி அடைய செய்வோம். பிரதமர் மோடி, சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த பி.எப்.ஐ. அமைப்பை தடை செய்துள்ளார்.

இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Tags:    

Similar News