இந்தியா

வாக்கு எண்ணும் பணிக்கு கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்

Published On 2024-05-29 04:33 GMT   |   Update On 2024-05-29 06:35 GMT
  • ஒவ்வொரு தொகுதிக்கும் 5 முதல் 20 பேர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்.
  • நியமனம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் அரசிதழில் வெளியீடு.

தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் பதிவான ஓட்டுகள் 4 அடுக்கு பாதுகாப்புடன் 39 மையங்களில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் ஓட்டு எண்ணும் பணிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தேவையான பயிற்சிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 39 தொகுதிகளுக்கும் ஓட்டு எண்ணும் பணிக்கு இப்போது கூடுதலாக 5 பேர் முதல் 20 பேர்கள் வரை உதவி தேர்தல் அதிகாரிகளாக நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதன்படி, தென் சென்னைக்கு துணை கலெக்டர்கள், தாசில்தார், ஸ்பெஷல் தாசில்தார் என மொத்தம் 10 பேர்கள் உதவி தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சென்னை தொகுதி வாக்கு எண்ணும் பணிகளுக்கு ஸ்பெஷல் தாசில்தார்கள் 9 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். வடசென்னை தொகுதிக்கு தாசில்தார், ஸ்பெஷல் தாசில்தார் என 10 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் தொகுதிக்கு தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் ரீஜனல் மானேஜர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர், டாஸ்மாக் மானேஜர், ஸ்பெஷல் தாசில்தார் உள்பட 8 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு ஸ்பெஷல் தாசில்தார் 9 பேரும் காஞ்சீபுரம் தொகுதிக்கு துணை கலெக்டர் உள்பட 9 பேரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கன்னியாகுமரி தொகுதிக்கு மீன்வளத் துறை உதவி இயக்குனர் உள்பட 22 அதிகாரிகள் உதவி தேர்தல் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வாக்கு எண்ணிக்கை நாளன்று தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு உதவியாக இருந்து வாக்கு எண்ணிக்கை பணிகளை முன்னின்று கவனிப்பது முதன்மையான பணி என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News