இந்தியா (National)

கருணை அடிப்படையிலான பணி நியமனம் உரிமை அல்ல, சலுகை தான் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

Published On 2022-10-05 03:38 GMT   |   Update On 2022-10-05 03:38 GMT
  • தந்தை இறந்து 14 வருடங்கள் கழித்து அனுஸ்ரீ தனக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என மனு அளித்திருந்தார்.
  • கருணை அடிப்படையில் வழங்கப்படும் பணி நியமனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

புதுடெல்லி :

கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் அனுஸ்ரீ. அவரது தந்தை திருவாங்கூர் உரங்கள் மற்றும் ரசாயன நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

இதற்கிடையே பணியின்போது கடந்த 1995-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந்தேதி அவர் இறந்தார். இறந்தவரின் மனைவி கேரள சுகாதாரத்துறையில் பணியில் இருந்ததால், கருணை அடிப்படையில் வழங்கப்படும் பணிக்கான விதி பொருந்தாமல் இருந்தது.

தந்தை இறந்து 14 வருடங்கள் கழித்து அனுஸ்ரீ தனக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என மனு அளித்திருந்தார். இறந்த ஊழியரின் ஆதரவில் இருப்பவர்களின் பட்டியலில் அனுஸ்ரீயின் பெயர் இல்லாததால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டார். இருப்பினும் பணியாளர் இறந்து 24 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், இறந்த பணியாளர் மட்டுமே குடும்பத்துக்கான ஊதியத்தை ஈட்டியவர் இல்லை என்ற அடிப்படையிலும், கருணை அடிப்படையிலான பணிக்கான திட்டம் பொருந்தாததால் அனுஸ்ரீயின் மனு மீண்டும் நிராகரிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கேரள ஐகோர்ட்டு இரு நீதிபதிகள் அமர்வும், தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது.

இதை எதிர்த்து உர நிறுவனத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது, இந்த மனுவை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

அரசு பணிகளில் நியமனங்களை பொறுத்தவரை, விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் 14 மற்றும் 16-வது பிரிவுகள் தெளிவுபடுத்துகின்றன.

இருப்பினும் கருணை அடிப்படையில் வழங்கப்படும் பணி நியமனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. அரசு பணியில் இருக்கும் ஒருவர் இறந்து விடும்போது அவரது குடும்பத்துக்கான எவ்வித வாழ்வாதாரமும் இல்லை என்ற பட்சத்திலும், அவரது குடும்பத்திற்கு கஷ்டமான சூழலில் உதவும் நோக்கத்தில் மட்டுமே கருணை அடிப்படையில் அவரை சார்ந்து இருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு விதிவிலக்கு அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது.

கருணை அடிப்படையில் ஒருவர் பணி நியமனம் செய்யப்படுவது சலுகை தானே தவிர அது உரிமை ஆகாது. எனவே கேரள ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News