லடாக்கில் இரவில் அதிநவீன ஹெலிகாப்டர் மூலம் கண்காணிக்கும் ராணுவம்
- 24 மணிநேரமும் இந்திய வீரர்கள் தீவிர கண்காணிப்பு
- இரவு நேரத்தில் பறப்பது மிகவும் சவாலான பணி.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவும் தீவிரவாதிகளை ஒடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய எல்லையில் ராணுவம் உஷார்படுத்தப்பட்டு உள்ளது.
24 மணிநேரமும் இந்திய வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஷ்மீரின் லடாக் பனி மலைப் பகுதியில் இந்திய ராணுவ முகாம் உள்ளது. இங்கு செல்வதற்கு இலகு ரக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ராணுவத்துக்காக இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் (எச்.ஏ.எல்.) துருவ் என்ற அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டரை தயாரித்தது. இந்த ஹெலிகாப்டர் மூலம் ராணுவத்தினர் இரவு நேரத்தில் லடாக் பனிமலைப் பகுதிக்கு செல்கின்றனர்.
இதுகுறித்து சீத்தல் ரக ஹெலிகாப்டரின் பைலட் கூறியதாவது:-
"ஹெலிகாப்டரில் பகல் நேரத்தில் பறப்பதை விட இரவு நேரத்தில் பறப்பது மிகவும் சவாலான பணி. சூரியன் மறைந்து இருண்டு விட்டால், தொலைவில் உள்ளவை எதுவும் தெரியாது. அதனால் இரவில் பறக்கும்போது, ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்டிருக்கும் உபகரணங்களைத் தான் நாம் அதிகம் சார்ந்திருக்க வேண்டும்.
இரவு நேரத்தில் பயணம் செய்வதற்கு முன் பலவித மான விளக்கங்கள் அளிக் கப்படும். செல்ல வேண்டிய இடம், வானிலை குறித்து விளக்கம் அளிக்கப்படும். அதன்பின்பே இரவு நேர பயணத்தை தொடர்வோம்" என்றார்.
தொழில்நுட்ப மேற்பார்வையாளர் மேஜர் ஆயுஷ் தேவிஜ்யால் கூறுகையில், "இரவு நேர பயணத்துக்கு முன்பாக, ஹெலிகாப்டரின் அனைத்து பாகங்களின் செயல்பாடுகளையும் சரிபார்க்க வேண்டும்.
ஹெலிகாப்டரின் என்ஜினை இயக்கி சோதனை செய்தபின், என்ஜின் அதிகாரி பறந்து செல்வதற்கு ஒப்புதல் அளிப்பார். மீட்பு பணி, இரவு நேர கண்காணிப்புக்கு இந்த இலகு ரக ஹெலிகாப்டர்கள் தான் பயன் உள்ளதாக இருக்கும்" என்றார்.