செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய பங்காற்றும்- மத்திய மந்திரி பியூஷ் கோயல்
- விவசாயிகள், மீனவர்கள் வாழ்க்கையை மேம்படுத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.
- உற்பத்தி திட்டம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைய வேண்டும்.
டெல்லியில் நடைபெற்ற உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு மற்றும் விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளதாவது:
புதுமைகளை உருவாக்காத எந்த சமூகமும் தேக்கமடைகிறது என்று பிரதமர் மோடி ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆற்றிய சுதந்திர தின உரையில் தெரிவித்திருந்தார். 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக உருவாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றும்.
உற்பத்தி திட்டத்துடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இணைந்தால், உலகிற்கு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பம் இரண்டையும் வழங்கும் நாடாக இந்தியா மாறும். சவால் மிகுந்த கொரோனா காலத்தில் நாட்டின் அறிவியல் சமூகத்தின் முயற்சிகளுக்கு தொழில்நுட்பத் துறையின் பணி பெரும் உதவிகரமாக இருந்தது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள், மீனவர்கள் வாழ்க்கையை மேம்படுத்துவது குறித்து தொழில்நுட்பத்துறை ஆராய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.