இந்தியா

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நாளை சந்திக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

Published On 2023-05-31 09:51 GMT   |   Update On 2023-05-31 09:51 GMT
  • அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு மாநில முதல் அமைச்சர்களையும், அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
  • ஜூன் 2ம் தேதி ராஞ்சியில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை நான் சந்தித்து ஆதரவு திரட்டுகிறேன்.

டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.

இந்த அவசர சட்டத்துக்கு எதிராக டெல்லி முதல் அமைச்சரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு மாநில முதல் அமைச்சர்களையும், அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் இதுவரை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவார், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் அவரது துணை தேஜஸ்வி யாதவ் ஆகியோரை சந்தித்துள்ளார். இதேபோல், ஜெ்ரிவால் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரை சந்தித்தார். அப்போது, அவசர சட்ட எதிர்ப்புக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோரை நாளை மற்றும் நாளை மறுநாள் சந்தித்து ஆதரவு திரட்டவுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் அரசியல் சாசனத்துக்கு விரோதமான ஜனநாயக விரோத டெல்லி அவரச சட்டத்துக்கு எதிராக திமுகவின் ஆதரவைக் கோருவதற்காக நாளை (ஜூன் 1ம் தேதி) சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினனைச் சந்திக்க உள்ளேன்.

ஜூன் 2ம் தேதி ராஞ்சியில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை சந்தித்து ஆதரவு திரட்டுகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News