இந்தியா

குற்றவாளியை காப்பாற்ற முயற்சி: பெண் டாக்டர் கொலை குறித்து ராகுல் காந்தி கேள்வி

Published On 2024-08-14 12:38 GMT   |   Update On 2024-08-14 12:38 GMT
  • பெண் டாக்டர் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டது.
  • கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் உடனே ஒப்படைக்க வேண்டும் என்றது.

புதுடெல்லி:

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் தொடர்புடைய சஞ்சய்ராய் என்பவரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர்.

கைதான சஞ்சய்ராயுடன் அந்த மருத்துவமனையில் உள்ள மேலும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே, பெண் டாக்டர் கொலை தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எனக்கூறிய கொல்கத்தா ஐகோர்ட், மாணவி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் உடனே ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, கொல்கத்தா பெண் டாக்டர் கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில், கொல்கத்தாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றும் முயற்சி, மருத்துவமனை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின்மீது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

மருத்துவ கல்லூரி போன்ற இடங்களில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை எப்படி வெளியில் படிக்க வைப்பார்கள்?

நிர்பயா வழக்குக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட கடும் சட்டங்கள்கூட இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதில் தோல்வி அடைந்தது ஏன்?

பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் சம்பவங்கள் குறித்து ஒவ்வொரு கட்சியும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தீவிர விவாதங்களை நடத்தி உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அத்துடன் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News