இந்தியா

நிதி நெருக்கடி.. 2 நாள் விமானங்கள் ரத்து... கோ பர்ஸ்ட் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய டிஜிசிஏ

Published On 2023-05-02 13:50 GMT   |   Update On 2023-05-02 17:28 GMT
  • தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் திவால் தீர்மானத்துக்கான விண்ணப்பம் கொடுத்துள்ளது.
  • 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

மும்பையை தலைமையிடமாக கொண்ட கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் குறைந்த கட்டண விமான சேவைக்கு பெயர்பெற்ற நிறுவனமாகும். சமீப காலமாக என்ஜின் பழுது காரணமாக விமானங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. மொத்தம் உள்ள 59 விமானங்களில் தற்போது 25 விமானங்கள் இயக்கப்படாமல் உள்ளன. இதனால் நிறுவனத்தின் வருமானம் வெகுவாக குறைந்து நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் திவால் தீர்மானத்துக்கான விண்ணப்பம் கொடுத்துள்ளது.

இந்நிலையில், கடும் நிதி நெருக்கடி காரணமாக மே 3 மற்றும் மே 4 ஆகிய இரண்டு நாட்களுக்கு விமான சேவையை நிறுத்துவதாக கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் அந்த விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்துள்ள பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக விளக்கம் கேட்டு கோ பர்ஸ்ட் நிறுவனத்துக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) நோட்டீஸ் அனுப்பி உள்ளது. திட்டமிடப்பட்ட அனைத்து விமானங்களையும் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் ரத்து செய்துள்ளதாகவும், இது தொடர்பாக 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'கோ பர்ஸ்ட் நிறுவனம் திட்டமிடப்பட்ட விமான சேவைகளை வழங்க தவறியதால், பயணிகளின் சிரமத்திற்கு வழிவகுத்தது. இது விதிமுறைகளை மீறிய செயல் ஆகும். இதற்காக விமான நிறுவனத்திற்கு எதிராக ஏன் தகுந்த நடவடிக்கை எடுக்கக்கூடாது? மே 3 மற்றும் 4ம் தேதிகளுக்கான விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் கோ பர்ஸ்ட் நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும். இதுதவிர மே 5ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்ட அட்டவணையின்படி விமானங்களை இயக்குவதற்கான செயல் திட்டத்தையும் தாக்கல் செய்யவேண்டும்' என டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News