இந்தியா

சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்: பசவராஜ் பொம்மை

Published On 2023-03-16 03:07 GMT   |   Update On 2023-03-16 03:07 GMT
  • இலவச மின்சாரம், பெண்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
  • விஜய சங்கல்ப யாத்திரைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

பெலகாவி:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெலகாவியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பா.ஜனதா சார்பில் விஜய சங்கல்ப யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூத் மட்டத்திலும் இத்தகைய யாத்திரைக்கு ஏற்பாடுகளை செய்துள்ளோம். எங்கள் கட்சியில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். போட்டி போட்டு செயல்படுகிறார்கள். தேர்தலில் போட்டியிட யாருக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஒவ்வொருவராக கர்நாடகத்திற்கு வந்து செல்கிறார்கள். அசாம், மத்திய பிரதேச முதல்-மந்திரிகள் வந்துவிட்டு சென்றுள்ளனர். மத்திய மந்திரிகள் வந்து விஜய சங்கல்ப யாத்திரையில் கலந்து கொண்டுவிட்டு செல்கிறார்கள். இலவச மின்சாரம், பெண்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக காங்கிரஸ் கூறியுள்ளது. இந்த வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றாது. உத்தரவாத அட்டை வழங்கினாலும் அதை செயல்படுத்த மாட்டார்கள்.

பெலகாவியில் சிவாஜி சிலைக்கு மாலை அணிவிக்க எம்.இ.எஸ். அமைப்புக்கு அனுமதி அளிப்பது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்வார்கள். வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மாநிலத்தில் பா.ஜனதாவுக்கு ஆதரவான அலை வீசுகிறது. மக்கள் மீண்டும் எங்கள் கட்சியை ஆட்சியில் அமர்த்த தயாராக உள்ளனர். நாங்கள் நடத்தும் விஜய சங்கல்ப யாத்திரைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

Similar News