முஸ்லிம்கள் மீதான மாட்டிறைச்சி தாக்குதல்கள் - 'வெறுப்பு அரசியலால் பயத்தை பரப்பும் பாஜக' - ராகுல்
- முதல்வர் நயாப் சிங் சைனி, பசு மீதான பாசத்தில் மக்கள் அப்படி செய்வதை யாரால் தடுக்க முடியும், அவர்களை குண்டர்கள் என்று சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.
- 'வெறுப்பை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி அதிகார ஏணியில் ஏறியவர்கள், நாடு முழுவதும் தங்களின் ஆட்சியின் மீதான பயத்தை விதைத்து வருகின்றனர்'
அரியானாவில் மாட்டுக்கறி சாப்பிட்டதாக எண்ணி பசு பாதுகாப்பு குண்டர்களால் புலம்பெயர் தொழிலாளியான சாபிர் மாலிக் என்ற இளைஞன் அடித்துக் கொலை செய்யப்பட்டான். மகாராஷ்டிராவில் ரெயிலில் மாட்டுக்கறி எடுத்துவந்ததாகத் தனது மகளுடன் வந்த இஸ்லாமிய முதியவரை சக பயணிகள் கண்மூடித்தனமாகத் தாக்கினர்.
இந்த இரண்டு சம்பவங்களில் வீடியோவும் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அரியானாவில் நடந்த சம்பவம் தொடர்பாக பேசிய பாஜகவை சேர்ந்த அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி, பசு மீதான பாசத்தில் மக்கள் அப்படி செய்வதை யாரால் தடுக்க முடியும், அவர்களை குண்டர்கள் என்று சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த சம்பவங்கள் குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆளும் பாஜக அரசு மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், வெறுப்பை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி அதிகார ஏணியில் ஏறியவர்கள், நாடு முழுவதும் தங்களின் ஆட்சியின் மீதான பயத்தை விதைத்து வருகின்றனர். பாதுகாலவர்கள் என்ற போர்வையில் ஒளிந்துள்ள வெறுப்பு சக்திகள், வெளிப்படையாகவே வன்முறையைப் பரப்பத் தொடங்கியுள்ளன. அதன்மூலம் சட்டத்தின் ஆட்சிக்கு பகிரங்கமாகச் சாவல் விடுத்துள்ளது.
பாஜக அரசால் இந்த அயோக்கியர்களுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது, அதனால்தான் துணிச்சலாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடந்து வருவதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.பாஜக எவ்வளவு முயற்சி செய்தாலும், வெறுப்புக்கு எதிராக இந்தியாவை ஒன்றிணைக்கும் இந்த வரலாற்றுப் போரில் எந்த விலையையும் கொடுத்தாகினும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.