இந்தியா

பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: தேஜஸ்வி வீட்டை சுற்றி போலீஸ் குவிப்பு

Published On 2024-02-12 01:36 GMT   |   Update On 2024-02-12 01:36 GMT
  • லாலு கட்சி உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு பா.ஜனதாவுடன் இணைந்தார் நிதிஷ் குமார்.
  • பா.ஜனதா ஆதரவுடன் முதல்வராக பதவி ஏற்ற நிலையில், இன்று மெஜாரிட்டியை நிரூபிக்க இருக்கிறார்.

பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்தார். லாலு யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக இருந்தார்.

திடீரென கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார், பா.ஜனதாவுடன் இணைந்தார். இதனால் தனது முதல் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் பா.ஜனதா ஆதரவுடன் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.

இதனால் இன்று பீகார் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. நிதிஷ் குமார் பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறார்.

இதற்கிடையே பீகாரில் எம்.எல்.ஏ.-க்களை இழுக்க குதிரை பேரம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இதனால் பா.ஜனதா எம்.எல்.ஏ.-க்கள் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.-க்கள் அக்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவ் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.

 

நேற்று எம்.எல்.ஏ.-க்களுடன் தேஜஸ்வி ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இதற்கிடையே தேஜஸ்வி யாதவ் வீட்டை சுற்றி ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஏதாவது சாக்குபோக்கு சொல்லி தேஜஸ்வி வீட்டிற்குள் நுழைந்து எம்.எல்.ஏ.-க்களிடம் விரும்பத்தாக நிகழ்வுகளை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால், நாங்கள் யாருக்கும் அடிபணிய மாட்டுாம்" என ராஷ்டிரிய ஜனதா தளம் குற்றம்சாட்டியுள்ளது.

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டமன்றத்தில் மெஜரிட்டியை நிரூபிக்க 123 பேர் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

நிதிஷ் குமாருக்கு ஆதரவு

நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 78 எம்.எல்.ஏ.க்கள், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 எம்.எல்.ஏ.க்கள், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 127 எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. பெரும்பான்மை பலத்தை விட இந்த கூட்டணிக்கு கூடுதலாக 6 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள் வரிசையில் உள்ள லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு 77 எம்.எல்.ஏ.க்கள், லெனின் கம்யூனிஸ்டுக்கு 12 எம்.எல்.ஏ.க்கள், இந்திய கம்யூனிஸ்டுக்கு 2 எம்.எல். ஏ.க்கள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் என 93 எம்.எல்.ஏ.க்கள் பலமே உள்ளது.

Tags:    

Similar News