இந்தியா

மீண்டும் சர்ச்சை பேச்சு: தொடர்பில்லை என விலகிய பா.ஜ.க.வும்... கங்கனாவின் பதிலும்...

Published On 2024-09-25 05:49 GMT   |   Update On 2024-09-25 05:49 GMT
  • விவசாய சட்டங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என விவசாயிகளே கோரிக்கை வைக்க வேண்டும்- கங்கனா.
  • விவசாய சட்டங்கள் குறித்து கங்கனா ரனாவத் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பா.ஜ.க. சார்பில் இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் இருந்து மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் நடித்துள்ள எமர்ஜென்சி படம் வெளியே வர முடியாமல் இருக்கிறது.

விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தியதை விமர்சித்து பேசினார். இதனால் கங்கனா ரனாவத்திற்கு எதிராக விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தினர். சில தினங்களுக்கு முன் சோனியா காந்தி குறித்து கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் மீண்டும் விவசாய சட்டங்கள் குறித்து பேசியுள்ளார். விவசாய சட்டங்கள் தொடர்பாக கங்கனா ரனாவத் கூறுகையில் "இது சர்ச்சையாகும் என்பது எனக்குத் தெரியும்... இருந்தபோதிலும் திரும்பப் பெறப்பட்ட விவசாய சட்டங்கள் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும்.

விவசாயிகளே இதற்கான கோரிக்கையை வைக்க வேண்டும். தேசிய வளர்ச்சியின் வலிமைக்கான தூண் அவர்கள். உங்களுடைய சொந்த நலனுக்கான சட்டங்களை திரும்ப கொண்டு வர வேண்டும் என நீங்கள் கோரிக்கை வைக்க வேண்டும் என நான் உங்களுக்கு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன்" இவ்வாறு கங்கனா ரனாவத் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கங்கனா ரனாவத் கருத்தில் இருந்து விலகியிருப்பதாக பா.ஜ.க. தெரிவித்துள்ளது. பா.ஜ.க.-வின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா இது தொடர்பாக கூறுகையில் "விவசாயிகள் சட்டங்கள் குறித்து பேசியது கங்கனா ரனாவத்தின் தனிப்பட்ட கருத்தாகும். பா.ஜ.க. சார்பில் இதுபோன்ற கருத்துகள் கூறுவதற்காக அங்கீகரிக்கப்படவில்லை" எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த கங்கனா ரனாவத் "நிச்சயமாக, விவசாயிகள் சட்டங்கள் குறித்த எனது கருத்துக்கள் தனிப்பட்டவை மற்றும் அவை அந்த மசோதாக்கள் மீதான கட்சியின் நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News