இந்தியா

ஜி20 உச்சி மாநாடு வெற்றி - பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்து பா.ஜ.க. தீர்மானம்

Published On 2023-09-13 20:13 GMT   |   Update On 2023-09-13 23:19 GMT
  • பா.ஜ.க.வின் பாராளுமன்ற குழு கூட்டம் நேற்று டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது.
  • ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய பிரதமருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுடெல்லி:

வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் வரவுள்ள பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பா.ஜ.க.வின் பாராளுமன்ற குழு கூட்டம் நேற்று டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது, ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய பிரதமர் மோடிக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுதொடர்பாக பா.ஜ.க. பாராளுமன்ற குழு வெளியிட்ட அறிக்கை:

ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது, ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமையானது.

பிரதமர் மோடி மேற்கொண்ட பல்வேறு முன்முயற்சிகள் மீது கருத்தொற்றுமை ஏற்பட்டது. இது, பிரதமர் மோடியின் திறமையான தலைமைப்பண்புக்கு ஒரு அடையாளம். இதை உலகமே பேசுகிறது.

ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கருப்பொருளின் பல்வேறு அம்சங்களை உருவாக்குவதில் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு பாராட்டுகள்.

60 நகரங்களில் நடைபெற்ற 200-க்கும் அதிகமான கூட்டங்கள் ஜி20 நிகழ்வுகளுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் தடம் பதித்தன. இதன் விளைவாக, இந்தியா ஜி20 தலைவர் பதவி உண்மையிலேயே மக்களை மையமாகக் கொண்டதாகவும் ஒரு தேசிய முயற்சியாகவும் உருவெடுத்தது.

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தட ஒப்பந்தம், உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி ஆகியவற்றின் முடிவும் கணிசமான முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றங்களாகும்.

ஜி20 உச்சி மாநாட்டின் வெற்றியில் ஈடுபட்ட அனைத்து அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் பங்களிப்புக்கு பாராட்டுகள்.

உலகில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இந்திய ஜி20 தலைமைக்கு ஒரு வலுவான திசையை வழங்குவதில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை அது அங்கீகரித்தது என தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News