போர்ன்விட்டாவை "ஹெல்த் டிரிங்க்" என்ற பிரிவில் இருந்து நீக்கவேண்டும் - மத்திய அரசு
- இந்திய உணவு சட்டங்களில் ஹெல்த் டிரிங்க்' என்ற வார்த்தை வரையறுக்கப்படவில்லை
- இந்திய உணவு சட்டங்களின் கீழ், 'எனர்ஜி டிரிங்க்' என்பது குளிர்பானங்களை தான் குறிக்கிறது
இந்தியாவில் உள்ள அனைத்து ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கும், போர்ன்விட்டா உட்பட அனைத்து பானங்களையும் "ஹெல்த் டிரிங்க்" (Health Drink) என்ற பிரிவில் இருந்து நீக்க வேண்டுமென ஏப்ரல் 10 ஆம் தேதி மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (NCPCR) நடத்திய விசாரணையின் அடிப்படையில், போர்ன்விட்டா போன்ற பானங்கள் 'ஹெல்த் டிரிங்க் அல்ல" என்று கண்டறியப்பட்டது என்று வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தனது அறிவிப்பில் வெளியிட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் (FSSAI) அனைத்து ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கும் பால், தானியம் மற்றும் மால்ட் சார்ந்த பானங்களை 'ஹெல்த் டிரிங்க்' (Health Drink) அல்லது 'எனர்ஜி டிரிங்க்' (Energy Drink) என லேபிள் ஒட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தியது.
ஏனென்றால், இந்திய உணவு சட்டங்களில் ஹெல்த் டிரிங்க்' என்ற வார்த்தை வரையறுக்கப்படவில்லை. மேலும் இந்திய உணவு சட்டங்களின் கீழ், 'எனர்ஜி டிரிங்க்' என்பது குளிர்பானங்கள் மற்றும் குளிர்பானங்கள் அல்லாத, சுவை கூட்டப்பட்ட தண்ணீர் சார்ந்த பானங்களைக் குறிக்கிறது.
தவறான சொற்களைப் பயன்படுத்துவது நுகர்வோரை தவறாக வழிநடத்தக்கூடும் என்று FSSAI ஈகாமர்ஸ் தளங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. எனவே, அனைத்து ஈகாமர்ஸ் உணவு வணிக தொழில்முனைவோர்கள் ஹெல்த் டிரிங்க்ஸ் / எனெர்ஜி ட்ரிங்க்ஸ் (Health Drinks/Energy Drinks) பிரிவுகளில் இருந்து இது போன்ற பானங்களை நீக்கி இதைச் சரிசெய்யுமாறு அறிவுறுத்தியது.
கடந்த வருடம், இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயென்சரான ரேவந்த் ஹிமத்சிங்கா, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானமான போர்ன்விட்டா (Bournvita) குறித்து விமர்சன வீடியோ ஒன்றைப் பதிவிட்டார்.
12 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த அந்த வீடியோவில், போர்ன்விட்டாவில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதாகவும், புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இந்த பானத்தைத் தருவதை நிறுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.