பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.20 லட்சம் பரிசு- வாலிபர்களை குறிவைக்கும் நூதன மோசடி
- வேலையில்லாத ஆண்களை குறி வைத்து பேஸ்புக் மூலம் ஒரு கும்பல் பணம் மோசடியில் ஈடுபட்டு வருகிறது.
- சமூக வலைதள பயனர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
புதுடெல்லி:
டிஜிட்டல் மயமாகி விட்ட இன்றைய காலத்தில் இணையதளம் மூலமாக நூதன முறைகளில் பல்வேறு மோசடிகளும் அரங்கேறிய வண்ணம் உள்ளன.
அரசின் உதவித்தொகை பெற்று தருகிறோம், லிங்கை தொட்டால் பரிசு என்பது உள்பட பல்வேறு வகைகளில் ஆசை காட்டி மக்களிடம் பணத்தை மோசடி பேர்வழிகள் அபேஸ் செய்கிறார்கள்.
இது தொடர்பாக போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் மத்தியில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தும், டிஜிட்டல் மோசடிகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஆனாலும் ஆசைகாட்டி பணம் பறிப்பவர்களிடம் படிக்காத ஏழைகள் முதல் படித்தவர்கள் வரை ஏமாறும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் வேலையில்லாத ஆண்களை குறி வைத்து பேஸ்புக் மூலம் ஒரு கும்பல் பணம் மோசடியில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பேஸ்புக்கில் பரவும் சில வீடியோக்களில் இளம்பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி, குழந்தைபேறு இல்லாத பெண்களை 3 மாதங்களுக்குள் கர்ப்பமாக்கும் ஆண்களுக்கு ரூ.20 லட்சம் வரை ரொக்கப்பரிசு வழங்கப்படும் என ஆசை காட்டுகின்றனர்.
இதை பார்க்கும் வேலையில்லாத இளைஞர்கள் பண ஆசையில் அந்த வீடியோவில் இருக்கும் எண்களை தொடர்பு கொள்ளும் போது மோசடி காரர்கள் அந்த வாலிபர்களிடம் ஆசை ஆசையாக பேசுவார்கள். அதாவது, எங்களது கார் டிரைவர் உங்களை ஓட்டலுக்கு அழைத்து செல்வார். அங்கு நீங்கள் மேடமை சந்திப்பீர்கள். நீங்கள் மேடத்துடன் உடலுறவு கொண்டு அவர்களை கர்ப்பம் தரிக்க வைத்தால் ரூ.20 லட்சம் கிடைக்கும். கர்ப்பம் தரிக்க முடியாவிட்டாலும் உங்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என கூறுகிறார்கள்.
இதை நம்பிய வாலிபர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்தால் உடனே இந்த வேலைக்கான அடையாள அட்டைக்கு ரூ.999 கட்டணம் செலுத்த வேண்டும் என ஆரம்பிப்பார்கள். தொடர்ந்து பல்வேறு காரணங்களை கூறி அந்த வாலிபர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் வரை பணத்தை கறக்கிறார்கள்.
பின்னர் தொடர்பு எண்ணை மாற்றி விட்டு இளைஞர்களை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது.
மத்திய பிரதேசம், அரியானா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வேலையில்லாத இளைஞர்களை குறி வைத்து நடத்தப்படும் இந்த நூதன மோசடியில் ஏராளமான இளைஞர்கள் பணத்தை இழந்துள்ளனர். அரியானா மாநிலத்தின் ஹிசார் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 2 மாதங்களுக்குள் இந்த கும்பலிடம் ரூ.1 லட்சம் வரை இழந்துள்ளார்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த டிரைவர் ஒருவர் ரூ.1 லட்சம் வரை இழந்துள்ளார். இந்த மோசடி கும்பல் பேஸ்புக்கில் 9 வகையான கணக்குகளை வைத்துள்ளனராம். அதில், 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இதுபோன்று பெண்களை கர்ப்பமாக்கினால் பணம், பரிசு என ஆசை காட்டி மோசடி செய்ததாக பீகாரை சேர்ந்த 8 பேர் கும்பலை ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போலீசார் கைது செய்திருந்தனர்.
அதன் பிறகு சில மாதங்கள் இது போன்ற மோசடிகள் ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மீண்டும் நூதன மோசடிகள் அரங்கேறி வருகிறது.
எனவே சமூக வலைதள பயனர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.