சாதிவாரி கணக்கெடுப்புதான் ஆட்சிக்கு வந்ததும் முதல் பணி: ம.பி.யில் ராகுல் உறுதி
- இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சரியான எண்ணிக்கை எங்குமே இல்லை
- பா.ஜ.க.வின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு அதிகாரம் எதுவும் இல்லை
மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகன் தலைமையில் பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் 230 சட்டசபை இடங்களுக்கான பொதுத்தேர்தல், வரும் நவம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்படும். ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தீவிரமாக களமிறங்கியுள்ளது.
இன்று, அம்மாநிலத்தின் ஷாஜாபூர் மாவட்டத்தில், களபிப்பல் பகுதியில் ஒரு பொது கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி உரையாற்றினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் சரியான எண்ணிக்கை தெரிய வரும். இதுவரை அவர்களின் சரியான எண்ணிக்கை எங்குமே இல்லை. நாட்டின் கொள்கைகளையும், சட்டங்களையும் வகுப்பதற்கு பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ.க்களுக்கோ எம்.பி.க்களுக்கோ எந்த அதிகாரமோ பங்களிப்போ இல்லை. கேபினெட் செயலர்கள் மற்றும் 90 அதிகாரிகளை கொண்டுதான் நாடே இயக்கப்படுகிறது. அதிகாரவர்க்கமும், ஆர். எஸ்.எஸ். பிரதிநிதிகளும்தான் நாட்டையே வழிநடத்துகிறார்கள். ஊழலின் ஊற்றுக்கண்ணாக மத்திய பிரதேச மாநிலம் திகழ்கிறது. ஒவ்வொரு நாளும் 3 விவசாயிகள் மாநிலத்தில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இவ்வாறு ராகுல் அறிவித்தார்.