இந்தியா

விடுதி உணவில் 'மிளகாய்' சேர்ப்பது தொடர்பாக மாணவர்கள் பயங்கர மோதல்- 30 பேர் சஸ்பெண்டு

Published On 2023-07-27 04:50 GMT   |   Update On 2023-07-27 04:50 GMT
  • விடுதியில் கர்னூல் மற்றும் காவாலி பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் உள்ளனர்.
  • விடுதியில் தங்கி உள்ள இரு தரப்பு மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திருப்பதி:

திருப்பதியில் ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான தேவஸ்தானம் சார்பில் வெங்கடேஸ்வரா கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்களுக்கு என தனியாக விடுதி நடத்தப்படுகிறது.

இதில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த விடுதியில் கர்னூல் மற்றும் காவாலி பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் கர்னூல், காவாலி என்ற பெயரில் தனித்தனியாக குழுவாக செயல்பட்டு வருகின்றனர். மாணவர்களுக்கு கல்லூரி உணவகத்தில் சமையல் செய்யப்படுகிறது.

இந்த உணவுகளில் காரமான ஆந்திரா மிளகாயை அதிக அளவில் சேர்க்க வேண்டுமென கர்னூல் பகுதி மாணவர்கள் தெரிவித்தனர். அதன்படி அதிக அளவு மிளகாய் உணவில் சேர்க்கப்பட்டது.

இதற்கு காவாலி பகுதி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் உணவில் போதுமான அளவு மட்டுமே மிளகாய் சேர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமாக சேர்க்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர் .

இதனால் விடுதியில் தங்கி உள்ள இரு தரப்பு மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக நேற்று கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். ஒருவருக்கொருவர் தாக்கினர்.

இந்த சம்பவம் கல்லூரியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த மாணவர்கள் 30 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மேலும் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரையும் விடுதியில் இருந்து காலி செய்ய உத்தரவிடப்பட்டது.

உணவில் மிளகாய் சேர்ப்பது தொடர்பாக மாணவர்கள் மோதிக்கொண்டது பரபரப்பாக பேசப்பட்டது.

Tags:    

Similar News