இந்தியா

பக்கம் பக்கமாக விளம்பரம்.. போட்டித் தேர்வு பயிற்சி வியாபாரமாகி உள்ளது - ஜெகதீப் தன்கர் ஆதங்கம்

Published On 2024-07-30 07:10 GMT   |   Update On 2024-07-30 07:11 GMT
  • மாநிலங்களவையில் வழக்கமாக நடைபெறும் விவாதங்களைச் சற்று ஒத்திவைத்து சுமார் இரண்டரை மணி நேரம் இந்த விவகாரம் குறித்த விவாதங்கள் நடந்தேறின.
  • . தினந்தோறும், செய்தித்தாள் பக்கங்களில் கோச்சிங் சென்டர்களின் பெரிய பெரிய விளம்பரங்களையே பார்க்கமுடிகிறது.

தலைநகர் டெல்லியில் பெய்த கனமழையில் பல்வேறு இடங்களில் நீர்த் தேக்கம் ஏற்பட்டது. இதனால் டெல்லியின் மேற்குப் பகுதியில் ஓல்ட் இந்திரா நகரில் செயல்பட்டு வரும் ரவு ஸ்டடி சர்க்கிள் என்ற ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்திற்குள் புகுந்த தண்ணீரில் சிக்கி அங்கு படித்து வந்த 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. கோச்சிங் சென்டர்கள் மற்றும் மாநகராட்சியின் அலட்சியத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

 

மேலும் கட்டிடத்தின் தரைதளத்தில் சட்டவிரோதமாக நூலகங்களை இயக்கி செயல்பட்டு வந்த ரவு உட்பட 13 கோச்சிங் சென்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க மத்திய அரசு சிறப்பு குழு ஒன்றையும் அமைத்துள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் மாணவர்கள் இதுநாள்வரை கோச்சிங் சென்டர்களில் சந்தித்துவந்த இன்னல்கள் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. நேற்று நடந்த மாநிலங்களவை மற்றும் மக்களவைக் கூட்டத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்துள்ளது.

மாநிலங்களவையில் வழக்கமாக நடைபெறும் விவாதங்களைச் சற்று ஒத்திவைத்து சுமார் இரண்டரை மணி நேரம் இந்த விவகாரம் குறித்த விவாதங்கள் நடந்தேறின. இந்த விவாதத்தில் பேசிய துணைக் குடியரசுத் தலைவரும் மாநிலங்களவை சபாநாயகருமான ஜெகதீப் தன்கர், இந்த பயிற்சி மையங்கள் கேஸ் சேம்பர் அறைகளுக்கு [இன அழைப்புக்காக ஹிட்லர் வதை முகாம்களில் பயன்படுத்தியதற்கு] சற்றும் குறைந்ததல்ல. தினந்தோறும், செய்தித்தாள் பக்கங்களில் கோச்சிங் சென்டர்களின் பெரிய பெரிய விளம்பரங்களையே பார்க்கமுடிகிறது.

இதற்கெல்லாம் அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது. மாணவர்களிடமிருந்து தானே. போட்டித்தேர்வு பயிற்சி என்பது [லாபம் கொழிக்கும்] வியாபாரமாகியுள்ளது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

 

இதற்கிடையில் மாநிலங்களவை விவாதத்தில் கோச்சிங் சென்டர் மாணவ மாணவிகளின் இறப்பு குறித்து பேசும்போது, அமிதாப் பச்சன் மனைவியும் சமாஜ்வாதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயா பச்சன் கண்கலங்கி வருந்திய வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Tags:    

Similar News