இந்தியா

மணிப்பூர் சட்டசபையில் காங்கிரஸ் அமளி- 10 குகி எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு

Published On 2023-08-29 10:04 GMT   |   Update On 2023-08-29 10:04 GMT
  • 3 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் கலவரத்துக்கு பிறகு முதல் முறையாக சட்டசபை கூடுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
  • காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமளி காரணமாக மணிப்பூர் சட்டசபை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

இம்பால்:

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து வழங்குவது தொடர்பாக பெரும்பான்மை மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடி இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறி கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நீடிக்கிறது.

இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் வன்முறைக்கு பலியானார்கள். ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

இதற்கிடையே பரபரப்பான சூழ்நிலையில் மணிப்பூர் சட்டசபையின் ஒருநாள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. 3 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் கலவரத்துக்கு பிறகு முதல் முறையாக சட்டசபை கூடுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

சபை கூடியதும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இந்த கூட்டத் தொடரை 5 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று கூறி அமளியில் ஈடுபட்டனர். மாநிலத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்கு ஒருநாள் போதாது என்று அவர்கள் தெரிவித்தனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமளி காரணமாக மணிப்பூர் சட்டசபை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

மணிப்பூர் சட்டசபையில் குகி இனத்தை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று சட்டசபைக்கு வராமல் புறக்கணித்தனர்.

Tags:    

Similar News