இதனால் தான் சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுகிறோம் - எதிர்கட்சி வேட்பாளர் சுரேஷ்
- நாங்கள் துணை சபாநாயகர் பதவி பற்றி கேட்டோம். அப்போது எங்களுக்கு எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை.
- இந்தத் தேர்தலின் முழுப்பொறுப்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமையால்தான் என்றார்.
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதியாக தேர்வானவர்கள் எம்.பி.க்களாக பதவி ஏற்றுக்கொண்டுள்ளனர். கடந்த 24-ந்தேதி தொடங்கிய முதல் நாள் பாராளுமன்ற கூட்டத்தில் 262 பேரும், நேற்று 271 பேரும் எம்.பி.க்களாக பதிவியேற்றுக்கொண்டுள்ளனர்.
புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதற்காக ஒடிசாவை சேர்ந்த மகதாப்பை தற்காலிக சபாநாயகராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து அவரது முன்னிலையில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்.
இதையடுத்து, பாராளுமன்ற சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 11 மணிக்கு நடைபெற இருக்கிறது. பாராளுமன்ற வரலாற்றில் மூன்றாவது முறையாக நடைபெற இருக்கும் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்கட்சிகள் சார்பில் மவெலிக்கரா எம்.பி. கே. சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், சபாநாயகர் தேர்தலில் எதற்காக போட்டியிடுகிறோம் என்பது குறித்து எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுரேஷ் கூறியதாவது:-
நாங்கள் சபாநாயகருக்கு எதிராக தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. ஆனால் மோடி தலைமையிலான அரசாங்கம், இந்திய கூட்டணியை குறிப்பாக காங்கிரஸ் கட்சித் தலைமையை அணுகியபோது, நாங்கள் துணை சபாநாயகர் பதவி பற்றி கேட்டோம். அப்போது எங்களுக்கு எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை.
முதலில் நீங்கள் சபாநாயகர் தேர்தலை ஆதரவு அளிங்கள், அதன் பிறகு துணை சபாநாயகரை பற்றி பேசலாம் என்றனர்.
அந்த பதில் எங்களுக்கு திருப்திகரமாக இல்லை. எனவே, சபாநாயகர் தேர்தலில் போட்டியிட எங்கள் தலைவர்கள் முடிவு செய்தனர்.
இந்த தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிடிவாதமான நிலைப்பாட்டால் ஏற்பட்டது. இல்லாவிட்டால் தவிர்த்திருக்கலாம். ஆனால், அவர்கள் எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைக்க தயாராக இல்லை. துணை சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சிக்கு வாய்ப்பளிக்க தயாராகவும் இல்லை.
அதனால் தான் இன்று தேர்தல் நடக்கிறது. ஆனால், இந்தத் தேர்தலின் முழுப்பொறுப்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமையால்தான் என்றார்.