சபரிமலையில் பக்தர்களின் வாகனங்களை பம்பையில் நிறுத்த ஐகோர்ட் அனுமதி
- புதிய நடைமுறைகளை தேவசம் போர்டு அறிவித்திருக்கிறது.
- சாலைகளின் ஓரத்தில் வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்)-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக கோவில் நடை நாளை மறுநாள் (15-ந்தேதி) மாலை திறக்கப்படுகிறது.
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு புதிய நடைமுறைகளை தேவசம் போர்டு அறிவித்திருக்கிறது.
அதன்படி மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் 'ஆன்லைன் முன்பதிவு' மற்றும் 'ஸ்பாட் புக்கிங்' அடிப்படையில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுகின்றனர்.
அது மட்டுமின்றி பக்தர்கள் தங்களின் இருமுடி கட்டுகளில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் ஆகியவற்றை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்பாட் புக்கிங் கிற்கு ஆதார் அட்டை கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட் டுள்ளது. இதேபோல் பல்வேறு புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் சபரி மலைக்கு வரக்கூடிய பக்தர்கள், தங்களின் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களை பம்பையில் நிறுத்த கோரள கோர்ட்டு அனுமதி வழங்கியிருக்கிறது.
சபரிமலையில் பக்தர்களுக்கான வசதிகள் தொடர்பான மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அனில் நரேந்திரன், முரளி கிருஷ்ணா உள்ளிட்டோர் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவு விவரம் வருமாறு:-
சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு விழாவில் பம்பை மலை உச்சி மற்றும் சக்குபாலம் பகுதியில் பக்தர்கள் தங்களின் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும். அந்த பகுதிகளில் பக்தர்கள் 24 மணி நேரமும் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.
அதேநேரத்தில் சாலைகளின் ஓரத்தில் வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கேரள அரசு போக்குவரத்து கழகத் துக்கு சொந்தமான 20 பஸ்க ளையும் மலை உச்சியின் தொடக்கத்தில் நிறுத்தலாம். தேவசம்போர்டு மற்றும் காவல்துறை இணைந்து வாகன நிறுத்தத்தை கட்டுப் படுத்த வேண்டும்.
இந்த அனுமதி தற்காலிக மானது தான். போக்குவரத்து நெரிசல் அல்லது வேறு பிற பிரச்சினைகள் எதுவும் ஏற்பட்டால் பம்பையில் வாகனங்கள் நிறுத்தும் முடிவை திரும்பப் பெறலாம். கட்டுப்பாடுகளை மீண்டும் விதிக்க அனைத்து அதிகாரங்களும் காவல் துறைக்கு அனுமதி வழங்கப் படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
பக்தர்களின் வாகனங்களை பம்பையில் நிறுத்த அனுமதி வழங்கினால் தங்களின் சங்கிலித்தொடர் சேவை பாாதிக்கப்படும் என்று கூறி, அந்த முடிவுக்கு கேரள அரசு போக்குவரத்துக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வாதிட்டது.
ஆனால் தேவசம் போர்ட்டு தனது தரப்பு வாதத்தை வலுவாக வைத்ததால் பம்பையில் பக்தர்ளின் வாகனங்களை நிறுத்த ஐகோர்ட்டு அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.