இந்தியா (National)

வெற்றிக் கொண்டாட்டத்தின் மறுப்பக்கம் - 1 மணி நேரத்தில் 9 ஆயிரம் கிலோ குப்பைகள்

Published On 2024-07-07 02:39 GMT   |   Update On 2024-07-07 02:39 GMT
  • சிலர் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டதால் போலீசார் அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • அலைகடலென ரசிகர்கள் குவிந்ததால் மும்பை மெரின் டிரைவ் பகுதியில் ஆங்காங்கே காலணிகள் சிதறிக்கிடந்தன.

மும்பை:

9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்தது. போட்டியில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, கடந்த மாதம் 29-ந்தேதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

20 ஓவர் உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது.

ஆனால் மகுடம் சூடிய இந்திய அணி வீரர்களால் உடனடியாக தாயகம் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இறுதிப்போட்டி நடந்த பார்படோசை புயல் தாக்கியதால் அங்குள்ள விமான நிலையம் மூடப்பட்டது. இதனால் இந்திய வீரர்கள் 2 நாட்கள் அங்குள்ள ஓட்டலில் முடங்கினர்.

நிலைமை சீரானதும் விமான சேவை தொடங்கியதையடுத்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள், அவர்களது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், இந்திய ஊடகத்தினர் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்த தனி விமானத்தில் தாயகம் புறப்பட்டனர்.

ஏறக்குறைய 16 மணி நேர பயணத்துக்கு பிறகு வீரர்களின் விமானம் வியாழக்கிழமை காலை 6 மணி அளவில் டெல்லி வந்தடைந்தது. விமான நிலையத்தில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பின்னர், இந்திய அணியினர் டெல்லியில் இருந்து விமானத்தில் மும்பைக்கு வந்தனர். அங்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் திறந்த பஸ்சில் பிரமாண்டமான வெற்றி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்திய வீரர்களின் பேரணி மாலை 5 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக மும்பை மெரின் டிரைவ் பகுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். ஆனால் ஊர்வலம் தொடங்க தாமதம் ஆனதால், தெற்கு மும்பை போக்குவரத்து நெரிசலால் திக்கு முக்காடி போனது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

இரவு 7.30 மணிக்கு வீரர்கள் திறந்த பஸ்சில் உலகக் கோப்பையுடன் பேரணியாக சென்றனர். இருபுறமும் கூடியிருந்த ரசிகர்கள் வெள்ளத்தில் பஸ் மிதந்து வந்தது. ரசிகர்களின் ஆர்ப்பரிப்பும், கரகோஷமும் காதை பிளந்தது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் மும்பையே ஸ்தம்பித்து போனது. ரசிகர்கள் கூட்டத்தில் ஆங்காங்கே தள்ளுமுள்ளு முற்பட்டது. சிலர் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டதால் போலீசார் அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அலைகடலென ரசிகர்கள் குவிந்ததால் மும்பை மெரின் டிரைவ் பகுதியில் ஆங்காங்கே காலணிகள் சிதறிக்கிடந்தன. மேலும் பெரும் அளவிலான குப்பைகள் கிடந்தது. இதனையடுத்து உடனே களத்தில் இறங்கிய மும்பை மாநகராட்சி ஊழியர்கள் சுமார் 9000 கிலோ குப்பைகளை அகற்றி அப்பகுதியை சுத்தம் செய்தனர். உணவு பொட்டலங்கள், பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்பட்டதால் மறுநாள் காலை அப்பகுதியை சுத்தமாக காட்சியளித்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், இணையவாசிகள் துரித நடவடிக்கை மேற்கொண்ட ஊழியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மும்பை மெரின் டிரைவ் என்பது வி.ஐ.பி. பகுதி. இங்கு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் அதிகம் பயணம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News