இந்தியா

காங்கிரஸ் காரிய கமிட்டியில் இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுக்க முடிவு

Published On 2023-06-14 10:16 GMT   |   Update On 2023-06-14 10:16 GMT
  • காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களாக உள்ள சிலரை மாற்ற கட்சி திட்டமிட்டுள்ளது.
  • காங்கிரஸ் காரிய கமிட்டியில் ராகுல் காந்தி ஏற்கனவே உறுப்பினராக உள்ளார்.

புதுடெல்லி:

மத்தியில் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களில் படுதோல்வி அடைந்தது.

இதுபோல வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் நடந்த தேர்தலிலும் தோல்வியை தழுவிய காங்கிரஸ், அங்கும் ஆட்சியை இழந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த கர்நாடகா மாநில தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து அடுத்து வர இருக்கும் வடமாநில தேர்தலிலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலிலும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் இப்போதே வியூகம் வகுக்க தொடங்கியுள்ளது.

இதன்ஒரு பகுதியாக கட்சியின் முக்கிய அமைப்புகளில் இளம் ரத்தத்தை புகுத்த சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் திட்டமிட்டு உள்ளனர். குறிப்பாக கட்சியின் தேர்தல் வியூகம், செயல்பாடுகள், திட்டங்கள் ஆகியவற்றை வகுக்கும் காரிய கமிட்டியை மறுசீரமைக்க முடிவு செய்துள்ளனர்.

அதன்படி காங்கிரஸ் காரிய கமிட்டியில் இளம்தலைமுறைக்கு கூடுதல் வாய்ப்பு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய நிர்வாகிகள் நியமனம் மூலம் கட்சி இன்னும் உத்வேகத்துடன் செயல்படும் எனவும், இதன்மூலம் ஏற்கனவே ஆட்சியில் இருந்த மாநிலங்களில் இழந்த செல்வாக்கை மீண்டும் மீட்டெடுக்க முடியும் எனவும் மூத்த நிர்வாகிகள் நம்புகிறார்கள்.

இதற்காக இப்போது காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களாக உள்ள சிலரை மாற்ற கட்சி திட்டமிட்டுள்ளது. இதில் கேரள மாநில முன்னாள் முதல் மந்திரி உம்மன்சாண்டி, தினேஷ் குண்டு ராவ், மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் எச்.கே.பாட்டீல், பீகார் பொறுப்பாளர் பக்தச ரண்தாஸ் மற்றும் நிர்வாகிகள் அவினாஷ் பாண்டே, ஹரிஷ் சவுத்திரி ஆகியோர் மாற்றப்படுவார்கள் என தெரிகிறது.

இவர்களுக்கு பதிலாக காங்கிரஸ் காரிய கமிட்டியில் கேரள மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா, மேல்சபை எம்.பி.ரஞ்சித் ரஞ்சன், நிதின் ராவத், கர்நாடக மாநில மூத்த தலைவர் ஹரிபிரசாத், மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல் மந்திரி பிரிதிவிராஜ் சவான், முன்னாள் மத்திய மந்திரி சுபோத்காந்த் சகாய் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதனை கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ராய்ப்பூரில் நடந்த கட்சி மாநாட்டில் காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வழங்கப்பட்டது. மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியின் விசுவாசியாகவே கருதப்படுகிறார். எனவே அவர், அவர்களின் விருப்பப்படி, கட்சியில் இளம்தலைமுறைக்கு வாய்ப்பு கொடுக்க ஏற்பாடு செய்வார் என கூறப்படுகிறது.

காங்கிரஸ் காரிய கமிட்டியில் ராகுல் காந்தி ஏற்கனவே உறுப்பினராக உள்ளார். பிரியங்கா காந்தியும் இப்போது உறுப்பினர் ஆகியுள்ளார். இவர்கள் புதுமுகங்களுடன் இணைந்து கட்சியை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News