ஆதரவற்ற குழந்தைகளுக்கு பர்கர்கள் கொடுக்க வேண்டும்... கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் விதித்த நிபந்தனை
- மனுதாரர் தனது முன்னாள் மனைவிக்கு ரூ.4.5 லட்சம் அபராதம் செலுத்தவேண்டும் என்று உத்தரவு.
- காவல்துறை மற்றும் நீதித்துறையின் நேரத்தை வீணடித்துவிட்டதாக நீதிபதி காட்டம்
புதுடெல்லி:
கற்பழிப்பு வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் வித்தியாசமான நிபந்தனையை விதித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண், தன் முன்னாள் கணவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. பின்தொடர்ந்ததாகவும், மிரட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, அந்த நபர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், பாலியல் பலாத்கார எப்ஐஆரை ரத்து செய்யவேண்டுமானால், இரண்டு அனாதை இல்லங்களுக்கு குறைந்தது 100 குழந்தைகளுக்கு "சுகாதாரமான மற்றும் நல்ல தரமான பர்கர்களை" வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், மனுதாரர் தனது முன்னாள் மனைவிக்கு ரூ.4.5 லட்சம் அபராதம் செலுத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டது.
கருத்து வேறுபாடு காரணமாக கணவன்- மனைவி இருவரும் பரஸ்பரம் பிரிய முடிவு செய்து, இரு தரப்பினரும் ஜூலை 4 ஆம் தேதி டெல்லியில் உள்ள சாகேத் கோர்ட்டில் உள்ள சமரச மையத்தில் வழக்கைத் தீர்த்து, உயர் நீதிமன்றத்தில் இதனை தெரிவித்தனர். எஃப்ஐஆர் ரத்து செய்யப்பட்டால் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று முன்னாள் மனைவி கூறியதாக தெரிகிறது.
2020-ம் ஆண்டு முதல் இந்த வழக்கு நடந்து வருவதாக குறிப்பிட்ட நீதிபதி, முக்கியமான விஷயங்களுக்கு பயன்படுத்தக்கூடிய காவல்துறை மற்றும் நீதித்துறையின் நேரத்தை வீணடித்துவிட்டதாக கூறியதுடன், மனுதாரர் சமூகத்திற்கு நன்மைகளை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.