இந்தியா

புல்டோசர் நீதி எதிரொலி: சொத்துக்களை இடிப்பது தொடர்பான வழிகாட்டுதலை வகுத்த உச்சநீதிமன்றம்

Published On 2024-11-13 07:29 GMT   |   Update On 2024-11-13 07:29 GMT
  • நோட்டீஸ் வழங்கப்பட்ட நாளில் இருந்து 15 தினங்களுக்குள் இடிப்புகளை மேற்கொள்ள கூடாது.
  • பொது நிலத்தில் அனுமதியின்று கட்டிடம் கட்டப்பட்டிருந்தால் இந்த உத்தரவு செல்லாது.

குற்றவாளிகள் அல்லது குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்துகளை புல்டோசர்களை கொண்டு இடிப்பதை உத்தர பிரதேசம் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகள் வழக்கமாக கொண்டுள்ளன.

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. புல்டோசர்களை கொண்டு சொத்துகளை இடிக்கும் விவகாரத்தில், அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தக்கூடிய வழிகாட்டுதல்களை வகுக்க உள்ளதாக உச்ச நீதிமன்றம் விசாரணையின் போது தெரிவித்து இருந்தது.

மேலும், 'இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்த வழக்கில் நாங்கள் என்ன தீர்வை முன்வைத்தாலும். அதை அனைத்து குடிமக்களுக்காகவும், அனைத்து நிறுவனங்களுக்காகவும் வைக்கிறோம்' என்றும் தெரிவித்து தீர்ப்பை ஒத்தி வைத்து இருந்தது.

இந்த நிலையில் புல்டோசர் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பை அளித்தது. புல்டோசர் மூலம் வீடுகளை இடிக்க தடைவிதித்து உத்தரவிட்டது. மேலும் இந்தியா முழுவதும் சொத்துகளை இடிப்பதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது.

நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகள் என்பதற்காக மட்டுமே மக்களின் வீடுகள் இடிக்கப்படுமானால் அது முற்றிலும் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. நீதித்துறையின் பணிகளை அதிகாரிகள் கைகளில் எடுப்பதை ஏற்க இயலாது. வழக்குகளில் தண்டனை பெற்று இருந்தாலும் கூட வீடுகளை இடிக்கக் கூடாது.

குற்றம் சாட்டினாலே வீடுகளை எப்படி இடிக்கலாம்? குற்றம் சாட்டப்பட்டவர் என்கிற காரணத்தாலேயே ஒருவரின் வீட்டை இடிப்பது சட்டவிரோதம். வீடுகளை இடிப்பது, ஒரே இரவில் தெருவில் பெண்கள், குழந்தைகளை பார்ப்பது மகிழ்ச்சியான காட்சியாக இல்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளுக்கு சில உரிமைகள், அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் சட்டத்தின் வெளிச்சத்தில் பாதுகாப்புகள் உள்ளன.

பொது நிலத்தில் அனுமதியின்று கட்டிடம் கட்டப்பட்டாலோ அல்லது கோர்ட்டால் இடிப்பு உத்ரதரவு பிறப்பிக்கப்பட்டாலோ அதன் உத்தரவுகள் இதற்கு பொருந்தாது.

முன் அறிவிப்பு இல்லாமல் மற்றும் நோட்டீஸ் வழங்கப்பட்ட நாளில் இருந்து 15 தினங்களுக்குள் இடிப்புகளை மேற்கொள்ள கூடாது. இடிப்பு நடவடிக்கைகளை வீடியோவாக எடுக்க வேண்டும்.

சொத்துக்களை இடிப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை இந்தியா முழுவதற்கும் வகுத்துள்ளோம்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

Tags:    

Similar News