"காங்கிரஸ் இருக்கும் இடத்தில் வளர்ச்சி இருக்காது" - பிரதமர் மோடி
- காங்கிரஸை எதிர்த்து பா.ஜ.க. தீவிரமாக களம் இறங்கி உள்ளது
- 5 வருடங்களில் காங்கிரஸார் என்ன சாதனை செய்தார்கள் என கேட்டார் மோடி
சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டசபையில் உள்ள 90 இடங்களுக்கு இம்மாதம் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.
கடந்த சட்டசபை காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாகேல் தலைமையில் ஆட்சி நடைபெற்றது. இதனால், மீண்டும் தொடர்ந்து ஆட்சிக்கு வர காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பா.ஜ.க.வும் தீவிரமாக களம் இறங்கியுள்ளன.
பா.ஜ.க.வை வெற்றியடைய செய்ய இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் இன்று அம்மாநில கன்கெர் நகரத்தில் பா.ஜ.க. ஏற்பாடு செய்த ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
காங்கிரஸ் இருக்கும் இடத்தில் வளர்ச்சி இருக்காது. மாநில மக்களும், பா.ஜ.க.வும் இணைந்து சத்தீஸ்கர் மாநிலம் உருவாக பாடுபட்டனர். காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போது, இங்குள்ள பா.ஜ.க.வுடன் சண்டையிட்டு கொண்டே இருந்தது. இது ஒரு எம்.எல்.ஏ.வையோ அல்லது முதல்வரையோ தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அல்ல. இது உங்கள் குழந்தைகளின் வருங்காலத்தை குறித்து நீங்கள் முக்கிய முடிவெக்க வேண்டிய தேர்தல். சத்தீஸ்கரின் அடையாளத்தை வலிமைப்படுத்த பா.ஜ.க. உழைக்கிறது. கடந்த 5 வருடங்களில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் சொத்து மதிப்பு கூடியதை தவிர அவர்கள் என்ன சாதனை செய்தார்கள்? ஏழைகள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு என்ன கிடைத்தது? இம்மாநில அரசாங்க அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதில் புது சாதனை படைத்து விட்டனர். மக்களுக்கு தரமில்லாத சாலைகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகளே கிடைத்தன.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.